மயானத்தில் அடிப்படை வசதி வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருவாடானை, பிப்.9:  திருவாடானையில் குடியிருந்து வருபவர்களுக்கு அரசு கல்லூரி அருகே பொது மயானம் உள்ளது. அதேபோல் தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பொது மயானம் ஒன்று கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது.திருவாடானை சுற்றுப்பகுதியில் விபத்தில் இறந்தவர்கள் ஆதரவற்ற நிலையில் அனாதையாக இருந்து உயிரிழந்தவர்கள் உடல்கள், தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள பொது மயானத்தில் எரித்தும் அடக்கம் செய்யப்படுகிறது. இந்த மயானம் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பாக பொதுப் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் இந்த மயானத்திற்கு என எந்தவித அடிப்படை வசதியும் செய்து கொடுக்க வில்லை. இதனால் இரவு நேரங்களில் உடல்களை அடக்கம் செய்ய போதிய மின் வசதி இல்லாமல் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

மேலும் முள் செடிகள் படர்ந்து மயானத்தை ஆக்கிரமித்துள்ளது. இவற்றை சுத்தம் செய்து தண்ணீர், மின் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என நீண்டகாலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாடானை ெபாதுமக்கள் கூறுகையில், இந்த மயானத்தில் தான் அனாதை, விபத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்கின்றனர். தேசிய நெடுஞ்சாலை அருகே இந்த மயானம் உள்ளதால் இரவு நேரங்களில் உடலை எரிக்கும் போது ஒருவித அச்சத்துடன் தான் பெண்கள் இந்த இடத்தை விட்டு கடந்து செல்கின்றனர். தண்ணீர் வசதி நிழற்குடை வசதி சுற்றுச்சுவர் போன்ற எதுவும் இல்லை. நெடுங்காலமாக மயானமாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த இடத்தில் அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இடத்தை விட்டால் வேறு இடமும் இல்லை. எனவே சுற்றுச்சுவர் கட்டி, மழை நேரங்களில் உடலை எரிக்க மேல்கூரை மற்றும் தண்ணீர், மின் வசதி ஏற்படுத்த நிதி ஒதுக்க வேண்டும் என்றார்.

Related Stories:

>