×

கடலாடி யூனியனில் தரமற்ற பணிகள் பாஜக குற்றச்சாட்டு

சாயல்குடி, பிப்.9:  கடலாடி ஒன்றியத்தில் நடந்து வரும் பணிகள் தரமற்று இருப்பதால், பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக கூறி பாஜகவினர் புகார் தெரிவிக்கின்றனர். கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் நடக்கும் மத்திய அரசின் திட்டப்பணிகளான கழிவறைகளை பொதுமக்களும், தடுப்பணைகளை விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் தரமாக பணிகளை செய்ய வலியுறுத்தி கடலாடி ஒன்றிய பாஜக தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலும், மாவட்ட செயலார் ராமசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிமாலை முன்னிலையில் பேரணியாக வந்து பி.டிஓ. பாண்டியிடம் மனு அளித்தனர். ஒன்றிய தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘கடலாடி யூனியனில் 60 பஞ்சாயத்துகள் உள்ளன. இங்குள்ள கிராமங்களில் பெரும்பாலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களே வசிக்கின்றனர். இதனால் வீடுகளில் ரூ.12 ஆயிரத்தில் கட்டப்படும் கழிவறைகளை கட்ட முடியாத நிலை இருப்பதால், யூனியன் சார்பில் ஒப்பந்ததாரர்கள் மூலம் கட்டிக் கொடுக்கப்படுகிறது. லாபநோக்கத்தோடு, அவசரகதியில் பெயரளவிற்கு கட்டப்படுகிறது.

தரமற்ற கோப்பைகள், சிமிண்ட் பூச்சுகள், குறைவான செப்டிக் டேங்க் உறைகள் என தரமற்று கட்டப்படுவதால், அவை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் கழிவறைகள் இன்றி பெண்கள் அவதிப்படும் நிலை உள்ளது. தற்போது மீனங்குடி பஞ்சாயத்தில் கட்டப்படும் கழிவறைகள் தரமற்று உள்ளது. எனவே அந்த ஒப்பந்த பணிகளை ரத்து செய்து விட்டு, மாற்று ஏற்பாடு செய்து, பொதுமக்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் கட்ட வேண்டும்.
இதுபோன்று விவசாயிகள் பயன்பாட்டிற்கு தடுப்பணைகள் கட்டப்படுகிறது. அவை தரமற்று அரசு விதிமுறைகளை மீறி கட்டப்படுகிறது. மழைநீரை சேமிக்க வரத்து கால்வாய், நீர்நிலை எனக் கூறி தரிசு நிலம், வயற்காடு, தனியார் பட்டா இடம் போன்றவற்றில் கட்டப்படுகிறது. இதனால் மழை காலத்தில் மழைநீரை சேமிக்க முடியவில்லை. கட்டுமான பணிகள் தரமற்று கட்டியதால் ஒருமாதம் கூட தாங்குவது கிடையாது. மழை பெய்தால் உடைந்து சேதமாகி விடுகிறது. இதனால் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என்றனர். எனவே பணிகளை தரமற்றதாக இருந்தால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

Tags : BJP ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...