×

வறுமையில் இருப்பவர்களுக்கு வசதிபடைத்தோர் உதவுங்கள் டிஐஜி முத்துச்சாமி பேச்சு

பட்டிவீரன்பட்டி, பிப். 9: பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையத்தில், வறுமைக்கோட்டிற்கு கீழே  உள்ள பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்கும் விழா நடைபெற்றது.  பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் கோபிகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் சரக டிஐஜி முத்துச்சாமி, திண்டுக்கல் எஸ்பி ரவளிபிரியா ஆகியோர் கலந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான அரிசி, போர்வை, வீல்சேர் ஆகியவற்றை பொதுமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கினர். டிஐஜி முத்துச்சாமி பேசுகையில், ‘நாட்டில் பிரச்னைகள் குறைந்தால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாது. போலீசாரின் வேலைப்பளுவும் குறையும். வசதி படைத்தவர்கள் தங்களது வருமானத்தில், ஒரு பகுதியை வறுமையில் வாடுபவர்களுக்கு உதவ வேண்டும். இதுபோன்று நலத்திட்ட உதவிகள் வழங்குவது சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும். தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் காவலர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது அய்யம்பாளையம் கிராமத்தில் கிராமபுற காவலர் திட்டத்தின் கீழ் காவலர் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் தங்களது புகார்களை, அவரிடம் அளிக்கலாம். அவர் மேல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவார். காவல்நிலையங்களுக்கு அலையவேண்டியதில்லை’ என்றார்.  நிலக்கோட்டை டி.எஸ்.பி முருகன், மேலூ ர் நகராட்சி கமிஷனர் பாலமுருகன், பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு