×

முதியவர்களை டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் மலை கிராமத்திற்கு சாலை வேண்டும் தாலுகா அலுவலகத்தை மக்கள் முற்றுகை

கொடைக்கானல், பிப்.9: கொடைக்கானல் அருகே மலைகிராமத்திற்கு சாலை வசதி கோரி கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி கிராம பஞ்சாயத்து பகுதியை சேர்ந்தது பரப்பன்ஓடை. இந்த பகுதியில் 100 குடும்பத்திற்கு மேல் வசித்து வருகின்றனர். இங்கு பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. இவர்கள் பயன்படுத்தும் மண் பாதை நடப்பதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இந்தப் பகுதியில் உள்ள தனியார் தனது தோட்டத்தில் உள்ள கிணற்று நீரை இந்த மண் பகுதியில் திறந்து விடுவதால் பொதுமக்கள் தொடர்ந்து சிரமம் அடைந்து வருகின்றனர். உடல் நலம் இல்லாத பெண்கள், முதியவர்களை டோலி கட்டி கொடைக்கானல் மருத்துவமனைக்கு கொண்டு வரக்கூடிய அவல நிலையில் இருந்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் இந்த பகுதியைச் சேர்ந்த டெல்சி என்ற பெண் உடல் நலம் இல்லாமல் இறந்து விட்டார். இவரது உடலை இந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்று பின்னர் லூர்துபுரம் பகுதியில் அடக்கம் செய்தனர். தொடர்ந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே உடனடியாக இந்த பகுதிக்கு சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும், தனியார் தோட்டத்தில் இருந்து வெளியேறும் நீரை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் தாலுகா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை தாசில்தார் கொடுத்த உறுதியின் அடிப்படையில் மக்கள் கலைந்து சென்றனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டம் செய்ய கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags : hill village ,road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி