சென்னை: சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணுவுக்கு (101), கடந்த 1ம் தேதி மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணு உடல்நிலையில் நேற்று முன்தினம் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. மேலும், அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவே முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
நல்லகண்ணு உடல்நிலை குறித்து ராஜிவ் காந்தி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நல்லகண்ணு (101) நோய்த்தொற்று மற்றும் இணைநோய்களால் (ரத்த கொதிப்பு, சிறுநீரக கோளாறு, உணவை விழுங்க முடியாமை) பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு மருத்துவத்துறை நிபுணர்களால் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் அவருடைய உடல்நிலையில் ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசக் கருவி சிகிச்சை மற்றும் மருந்துகள் பல்வேறு மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது அவரது உடல்நிலையை பல்வேறு சிகிச்சைகளின் மூலம் சீராக்க அதிதீவிர முயற்சியுடன், 24 மணிநேர தொடர் அதிதீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
