திருச்சியில் வைரல் வீடியோ

திருச்சி, பிப்.8:  திருச்சி மாவட்ட இளைஞர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக ஒரு வீடியோ வெகுவேகமாக பரவி வருகிறது. குறைந்தளவு தண்ணீர் ஓடும் ஆற்றுக்குள் எடுக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில், கல் இடுக்கில் சிக்கிய ஒரு முதலை குட்டியின் வாலை பிடித்து வெளியே இழுக்கும் வாலிபர்கள் அதை தரதரவென இழுத்துக் கொண்டு சுற்றுகின்றனர். ஒவ்வொருவராக அதன் வாலை பிடித்துக் கொண்டு போஸ் கொடுத்து வீர வசனம் பேசுகின்றனர். இப்படியாக ஓடும் அந்த வீடியோவின் பின்னணியை வைத்து பார்க்கும்போது, அது ஏதோ ஒரு அணைக்கட்டு பகுதியில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம், குறிப்பாக முக்கொம்பு பகுதியில் காவிரி ஆற்றில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது. முதலை பிடிபட்டது குறித்து வனத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது அப்படி ஏதும் முதலை பிடிபடவில்லை, பிடிபட்ட தகவலும் தங்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை என்று கூறினர்.

சம்பவம் நடந்ததாக அறியப்படும் முக்கொம்பு பொதுப்பணித்துறையினரும் இதே தகவலை தெரிவித்தனர். அப்படியெனில் பிடிபட்ட முதலையை அந்த வாலிபர்கள் ஆற்றிலேயே விட்டுவிட்டனரா அல்லது கொன்றுவிட்டனரா என்ற கேள்விக்கு விடை தேடி புறப்பட்டுள்ளனர் வனவிலங்கு ஆர்வலர்கள். இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி இந்தியாவில் முதலையை வேட்டையாடுதலும், விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுள்ளது குறிப்பிடத்தக்கது. முதலை வீடியோ குறித்து ஜீயபுரம் போலீசாரும், வனத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீரில் வந்த முதலை முக்கொம்பு காவிரி ஆற்றில் கதவணையில் சிக்கி காயம் அடைந்த நிலையில் இருந்ததும், இளைஞர்கள் அதை வைத்து விளையாடிய போது அது இறந்ததும் தெரியவந்துள்ளது. ஆனால் அவர்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்திருக்கலாம் என தெரிகிறது. இச்சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>