புதுடெல்லி: பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தின் நோக்கம் மற்றும் அதன் தாக்கம் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. காசாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் தாக்குதல்களில் 70,000 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ள நிலையில், பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் ஆதரவு நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இது தவிர, வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகையானது 7.8 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதும், அது தற்போதைய பணவீக்கத்தை சமாளிக்க போதுமானதாக இல்லை என்பதும் வெளியுறவு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு சுட்டிக்காட்டியது.
இந்நிலையில் பிரதமர்மோடி நாளை மற்றும் நாளை மறுநாள் இஸ்ரேல் நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தின் நோக்கம் தொடர்பாக நேற்று வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் குறித்து எம்பிக்கள் கடும் கேள்விகளை எழுப்பினர். அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் இப்பகுதியில் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பயணம் இந்தியாவின் தன்னாட்சி கொள்கையை பாதிக்குமா என்று உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்தப் பயணத்தின் போது பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். மேலும் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த அந்த நாட்டு அரசுடன் ஆலோசனை நடத்துவார். இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், ‘பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நீண்ட கால வியூக நலன்களைக் கருத்தில் கொண்டே இந்த உயர் மட்டப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
