×

அதிகாரிகளை கண்டித்து மீன்துறை அலுவலகம் முன் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்

சேதுபாவாசத்திரம், பிப்.8: மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து, வரும் 17ம் தேதி மல்லிபட்டிணம் மீன்துறை அலுவலகம் முன் கஞ்சி தொட்டி திறந்து காத்திருப்பு போராட்டம் நடந்த 5 மாவட்ட நாட்டுப்படகு மீனவர் சங்கம் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாக்ஜலசந்தி கடல் பகுதிக்குட்பட்ட ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை உட்பட 5 மாவட்ட நாட்டுப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகளின் கூட்டம் சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள சோமநாதன்பட்டிணம் மீனவ கிராமத்தில் தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் ஜெயபால் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியூ) ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்படகு மீனவ சங்க தலைவர் முருகானந்தம், திருவாரூர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் , நாகை மாவட்ட தலைவர் ஆறுகாட்டுதுறை பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன் வளத்தையும் கடல்வளத்தையும் முற்றாக அழித்து வரும் நாகை, காரைக்கால் மாவட்ட விசைப்படகுகள் ராமேஸ்வரம் முதல் கோடியக்கரை வரையிலான 5 மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்து வரும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல வேண்டும். அதே போல் 4 நாட்கள் நாட்டுப்படகுகள் மட்டுமே மீன்பிடிக்க செல்ல வேண்டும் என்ற தொழில் ஒழுங்கு முறையை சீர்குலைக்கும் வகையில் 7 நாட்களும் கடலிலேயே தங்கி தொழில் செய்யும் வகையில் தங்கு கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குவதை தமிழக , புதுச்சேரி மாநில மீன்வளத்துறை நிர்வாகங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். தமிழக அரசின் 1983 தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட விதிமுறைகளுக்கு மாறான அதிக குதிரை திறன் கொண்ட மிகப்பெரிய படகுகளாகும். இவை ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டிய படகுகளாகும்.

எனவே இப்படகுகள் ஆழம் மிக குறைவான பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபடுவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் .அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடி தொழில் செய்வதையும் 5 நாட்டிகல் மைல் (9 கிலோமீட்டர்) தொலைவிற்குள் மீன்பிடிக்க மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதிக்க கூடாது. இந்த கொரிக்கைகளை வலியுறுத்தி வரும் 17ம் தேதி விசைப்படகுகளுக்கு உறுதுணையாக இருந்துவரும் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் நிர்வாகம் மீது பொது விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி மல்லிபட்டிணம் மீன்துறை அலுவலகம் முன் கஞ்சி தொட்டி திறந்து காத்திருப்பு போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : fisheries office ,
× RELATED இலங்கை கடற்படையினர் கைது செய்த...