×

இன்று காலை ‘லே’ நோக்கிச் சென்ற போது டெல்லி விமான இன்ஜினில் தீப்பொறியால் பீதி: 150 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

புதுடெல்லி: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை லே நோக்கிச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் இன்ஜின் நடுவானில் பழுதானதால் முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. டெல்லியிலிருந்து சுமார் 150 பயணிகளுடன் காலை 6.30 மணி அளவில் ‘லே’ நோக்கி எஸ்ஜி-121 என்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்டது. போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் உயரே பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அதன் இரண்டாவது இன்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

அப்போது இன்ஜினிலிருந்து தீப்பொறிகள் மற்றும் ஜுவாலைகள் வந்ததை கவனித்த விமானிகள் உடனடியாகக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தனர். தொடர்ந்து விமான நிலையத்தில் முழு அவசர நிலை அறிவிக்கப்பட்டு, தீயணைப்பு மற்றும் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. அதிர்ஷ்டவசமாக விமானம் பத்திரமாகத் தரை இறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் அனைவரும் எவ்வித காயமுமின்றி பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது நடந்துள்ள இன்ஜின் பாதிப்பு குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

தொடர்ந்து இதுபோன்ற தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதால் உள்நாட்டு விமான நிறுவனங்களின் பராமரிப்புப் பணிகள் குறித்து தணிக்கை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில், ‘வானில் தீப்பொறி தெரிந்தபோது அனைவரும் பயந்துவிட்டோம், ஆனால் விமானி சாமர்த்தியமாகச் செயல்பட்டு எங்களைக் காப்பாற்றினார்’ என்று தெரிவித்தார். ஏற்கனவே கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் இதே வழித்தடத்தில் சென்ற விமானத்தின் இன்ஜினில் பறவை மோதியதால் அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Delhi ,Leh ,New Delhi ,Indira Gandhi International Airport ,
× RELATED அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பவன்...