×

அரசு கலை பண்பாட்டுதுறை சார்பில் கலைஞர்களுக்கு விருது வழங்கல்

புதுக்கோட்டை, பிப்.8: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் நாடக விழா மற்றும் புதுக்கோட்டை மாவட்டக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா புதுக்கோட்டையில் உள்ள முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தில் நடைபெற்றது. கலை பண்பாட்டுத்துறை ஆணையர் கலைஅரசி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத்துறை ஆணையர் பேசியதாவது. மாவட்டக்கலை மன்றம் மூலம் கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட அளவில் வழங்கப்படும் கலைமுதுமணி விருது சதிர் கலைஞர் விராலிமலை முத்துக்கண்ணம்மாளுக்கும், கலை நன்மணி விருது கிராமிய தவில் கலைஞர் கோலேந்திரம் ராஜேந்திரனுக்கும், கலைச்சுடர்மணி விருது கொத்தமங்கலத்தை சேர்ந்த சிற்பி திருநாவுக்கரசுக்கும், கலைவளர்மணி விருது கிராமிய இசைக்கலைஞர்கள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமிக்கும், கலை இளமணி விருது ஓவியப்பிரிவில் கி.நா.கல்கிச் செல்வன் ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்மொழி மற்றும் பண்பாட்டுடன் சேர்ந்து நமது கலையும் மிகவும் தொன்மையானது. இந்த பண்பாடு மற்றும் கலாச்சாரத்தையும் நாம் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்றார். கலைபண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் ஹேமநாதன், சங்கத் தலைவர் கலைமாமணி, இசையரசன், செயலாளர் சுப்பிரமணியம், புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : artists ,Government Arts and Culture Department ,
× RELATED புத்தகம் படித்து கதை சொல்லும் பழக்கத்தை மீட்டெடுக்க வேண்டும்