×

தமிழக அரசு முத்தரப்பு கூட்டத்தை கூட்டி கரும்பு டன்னுக்கு ரூ.4,500 பரிந்துரை விலையை உடனே அறிவிக்க வேண்டும் சர்க்கரை ஆலை விவசாயிகள் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

பெரம்பலூர், பிப்.8: பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் சின்னாறு பகுதியில் உள்ள கூட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ஞானமூர்த்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராசேந்திரன், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் சீனிவாசன், கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் அன்பழகன், காங்கிரஸ் கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் உடனே நீக்க வேண்டும். பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் கடந்த 2ம் தேதி உடைந்து விழுந்த 2-2-2021 அன்று உடைந்து விழுந்ததால் சுமார் 500 மூட்டை சர்க்கரை பாகு தண்ணீரில் கரைந்து வீணாகியுள்ளது. 1990ல் போடப்பட்ட கிரைஸ்லேட்டர், இங்சக்ஷன் பேனல், 7,8 பேஃன்கள் ஆகியவற்றை மாற்றி சீர்செய்ய வேண்டும் என பலமுறை பேரவைக் கூட்டத்திலும், அதிகாரிகள் கூட்டத்திலும் விவசாய சங்கத்தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அதிகாரிகள் அதற்கான முயற்சி எடுத்து புதிய எந்திரங்களை வாங்க தமிழக அரசிடம் பலமுறை நிதி கேட்டும் கொடுக்காமல் பழைய எந்திரத்தையே பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதால் இந்த விபத்து நடந்துள்ளது.

தமிழக அரசின் நேரடி கட்டுப்பாடில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி பழுதடைந்த எந்திரங்கள் மாற்றி புதிய கிரைஸ்லேட்டர்களை பொருத்தி ஒரு நாளைக்கு 3000டன் அரைப்பதற்கு தகுதியுள்ள திறனை உருவாக்க வேண்டும் என இந்த கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது. 2015-16, 2016-17 ம் ஆண்டுகளில் வெட்டிய கரும்புக்கு தமிழக அரசு அறிவித்த கூடுதல் விலை பாக்கிதொகையை பிப்ரவரி மாதத்தில் கொடுப்பதாக அரசு அறிவித்திருந்தது. முழு தொகையையும் உடனே வழங்க வேண்டும். தமிழக அரசு முத்தரப்பு கூட்டத்தை கூட்டி 2020-2021ம் ஆண்டுக்கான மாநில அரசின் பரிந்துரை விலையாக (எஸ்ஏபி) டன்னுக்கு ரூ.4,500 உடனே அறிவிக்க வேண்டும். பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் காலிப்பணி இடத்தை நிரப்ப பலமுறை வலியுறுத்தியும் கண்டுகொள்ளாத தமிழக அரசை இக்கூட்டம் கண்டிக்கிறது. கரும்பு வெட்டுக்கூலியை அரசே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

கரும்பு விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் 11-2-2021 அன்று சென்னை கோட்டைமுன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து கரும்பு விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்துகொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஆலையின் பங்குத்தாரர்கள் சங்க தலைவர் ராமலிங்கம், செயலாளர் நடராஜன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல், செந்துறை ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி செயலாளர் பச்சமுத்து, செந்துறை ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் புலேந்திரன், வி.களத்தூர் மாணிக்கம், நல்லறிக்கை செல்வராசு, சிறுகுடல் கருப்புடையார், துங்கபுரம் மணிகண்டன், பீல்வாடி துரைசாமி, கோவில்பாளையம் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu ,Government ,meeting ,
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...