கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக்கொலை: சடலத்தை சாக்குமூட்டையில் எடுத்து சென்ற தம்பதி ரோந்து போலீசாரிடம் சிக்கினர்

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த காட்டூர் பகுதியில் காட்டூர் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது, அவ்வழியே பைக்கில் ஆணும், பெண்ணும் சாக்கு மூட்டையுடன் சென்று கொண்டிருந்தனர். அதை பார்த்ததும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில், காட்டூர் ஊராட்சி ராமநாதபுரம் அடுத்த திருக்குளம் பகுதியில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சிலர் வீடு வாடகைக்கு எடுத்து அப்பகுதிகளில் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகின்றனர். இதில், தேவேந்திரசிங்(41), அவரது மனைவி சாயா(33) ஆகியோர் வசிக்கும் வீட்டின் அருகே வசித்தவர் மனோஜ்(30). கடந்த 6 மாதமாக தேவேந்திரசிங் வெளியிடத்திற்கு வேலைக்கு சென்றுவிடுவார். அப்போது தனியாக இருந்த சாயாவுக்கும், மனோஜூக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, மனோஜ், சாயாவிடம் நிரந்தரமாக சேர்ந்து வாழாலாம் எனக் கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துசென்று உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது, அதனை புகைப்படமாகவும் எடுத்து வைத்துள்ளார். மேலும், தன்னுடன் நிரந்தரமாக வராவிட்டால் அந்தரங்க போட்டோக்களை கணவரிடம் காட்டிவிடுவதாக சாயாவை மிரட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சாயா நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கணவர் தேவேந்திரசிங்கிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவனும், மனைவியும் நேற்று முன்தினம் இரவு மனோஜ் வீட்டிற்கு சென்று உருட்டைக்கட்டையால் அவரை அடித்து கொலை செய்தனர். மேலும், கொலையை மறைக்க சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி பைக்கில் ஏற்றி நள்ளிரவில் காட்டூரில் இருந்து வாயலூர் நோக்கி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து கொலை செய்யப்பட்ட மனோஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories:

>