×

சசிகலா பேனர் வைக்க எதிர்ப்பு அமமுகவினர் சாலை மறியல்

பூந்தமல்லி: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையாகியுள்ள சசிகலா, இன்று சென்னை வரவுள்ளார். இந்நிலையில், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அமமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை நசரத்பேட்டை, பூந்தமல்லி குமணன்சாவடி, ஆகிய பகுதிகளில் சசிகலாவிற்கு வரவேற்பளிக்க அமமுகவினர் சார்பில் பேனர்கள் வைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.

இதனால் முன்னாள் எம்எல்ஏக்கள் ஏழுமலை, பொன்.ராஜா ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அமமுகவினர் பூந்தமல்லி - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த நசரத்பேட்டை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் பேனர் வைக்க அனுமதி இல்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் போலீசாருக்கும், அமமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து 30க்கும் மேற்பட்ட அமமுகவினரை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags : Protesters ,road ,Sasikala ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...