×

அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகளில் தொடரும் விபத்து குவாரிகளை ஆய்வுக்கு உட்படுத்த மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், மதூர் கிராமத்தில் கல்குவாரி விபத்து நடைபெற்ற இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சங்கர், நிர்வாகிகள் பாஸ்கர், மதுசூதனன், நேரு உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் சி.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது. மதூர் கிராமத்தில் இயங்கி வரும் ஆறுபடை குருப் கல்குவாரியில் நடைபெற்ற விபத்தில் 5 லாரிகள், 2 வெடி மருந்து நிரப்பும் வாகனங்கள், 2 பொக்லின் இயந்திரங்கள், ஒரு டீசல் நிரப்பும் வாகனம் ஆகியவை விபத்தில் சிக்கியுள்ளது.  

விபத்து நடந்து இரண்டு  மணி நேரம் தாமதமாக வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இரண்டு வடமாநில இளைஞர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் ஈரோட்டை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். பகல் 12 மணிக்கு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து கொண்டிருக்கும் போதும் திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பகல் 2 மணி வரையிலும் அந்த குவாரியில் எத்தனை பேர் வேலையில் இருந்தனர். எத்தனை பேர் கரையேறி தப்பி வந்துள்ளனர் என்ற விவரத்தை கூட மாவட்ட நிர்வாகத்தால் அறிய முடியவில்லை என்பது வேதனைக்குரியதாக உள்ளது.

இந்த சம்பவத்தை அறிந்து கிராம பொதுமக்கள் விபத்து நடந்த  பகுதிக்கு சென்று விசாரித்தபோது செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணன் தலைமையிலான காவல்துறையினர் பொதுமக்களை விரட்டி அடித்துள்ளனர். செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களும்  மிரட்டப்பட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்ற ஆறுபடை குருப் கல்குவாரி 3 ஆண்டுகாலமாக அனுமதி முடிந்த நிலையிலும் இயங்கி வந்துள்ளதாக தெரிகிறது. அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்துள்ள இடத்தில் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஊராட்சிக்கு சொந்தமான பாப்பாத்தி குட்டை, வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் தொடர் பாதிப்புக்குள்ளாகும் 25 க்கும் மேற்பட்ட கிராமங்களை பாதுகாத்திட வேண்டும். கல்குவாரிகள் அதிக அளவில் இயங்கிடும் அரும்புலியூர் பிர்கா மற்றும் குண்ணவாக்கம் பிர்காக்களில் இயங்கிவரும் குவாரி மற்றும் கிரஷர்களை ஆய்வு செய்து அனுமதி இல்லாத குவாரிகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுத்திட வேண்டும். விபத்து நடந்த இடத்தில் துரிதமாக மீட்பு பணிகளை செய்து உள்ளே இருக்கும் நபர்களை மீட்டெடுக்க வேண்டும். இறந்து போன நபர்களுக்கு 50 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும். படுகாயம் அடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும். கல்குவாரி முதலாளிகள் மீது வழக்கு பதியாமல் அதில் வேலை செய்யும் நபர்கள் மீது காவல்துறை பதிந்த வழக்கை திரும்ப பெற்று ஆறுபடை குவாரிக்கு சொந்தமானவர்கள் மீது வழக்கு பதியப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : Marxist Party ,inspection ,
× RELATED தமிழைப்பற்றி பேசி தமிழர்களை ஏமாற்றப்...