சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 89 பிரபல ரவுடிகள் கைது: போலீஸ் கமிஷனர் தகவல்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளை கைது செய்ய தமிழக டிஜிபி திரிபாதி அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல்துறை ஆணையர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக குற்றப்பின்னணி உள்ள நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னையில் பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும், அமைதிக்கு ஆபத்தை விளைவிக்கும் கொடுங்குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த த புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த கல்வெட்டு ரவி, சீசிங் ராஜா, அரும்பாக்கத்தை சேர்ந்த ராதா (எ) ராதாகிருஷ்ணன், தனசேகர் (எ) எண்ணூர் தனசேகர் (27), காக்கா தோப்பு பாலாஜி, சுரேஷ் (எ) ஆற்காடு சுரேஷ் (38), வியாசர்பாடியை சேர்ந்த நாகேந்திரன் (45),  மதுரை செந்தில் (32), கணேசன் (எ) தொப்பை கணேசன், தணிகா (53), பெண் தாதா கிருஷ்ணவேணி, தட்சிணாமூர்த்தி, உமர்பாட்ஷா, கணேசன் (எ) ஜங்கில் கணேசன் (30), மதன் (எ) பள்ளுமதன் (43), இம்ரான் (எ) இம்ரானுதீன், மேடவாக்கத்தை சேர்ந்த சேவியர் அருள் (45) உட்பட சென்னை முழுவதும் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 89 பிரபல ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், நன்னடத்தை பிணை பத்திர உறுதிமொழியை மீறியதாக 120 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு முதல் சென்னை முழுவதும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 571 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றவியல் நடைமுறை சட்டம் 107, 109, 100 பிரிவுகளின் கீழ் மாநகரம் முழுவதும் 3,705 குற்றவாளிகள் போலீசார் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>