×

நீதிமன்ற உத்தரவை மீறும் ஆளும்கட்சியினர் மீண்டும் தலைதூக்கும் பேனர் கலாச்சாரம்:'மாநகராட்சி அதிகாரிகள் மவுனம்

பெரம்பூர்: சென்னையில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்ட பேனர்களால் உயிரிழப்புகள் அதிகரித்ததை தொடர்ந்து, சென்னையில் அனுமதியின்றி யாரும் பேனர் வைக்க கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது தேர்தல் நெருங்கிவிட்டதால் ஆளும்கட்சியினர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆங்காங்கே பேனர்களை வைத்து வருகின்றனர். அதிமுக நிகழ்ச்சிகள் அனைத்திலும் அதிகளவில் பேனர்களை வைத்து அமர்க்களப்படுத்தி வருகின்றனர். நேற்று ஒரு நிகழ்ச்சியில் நிருபர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் அனுமதி இன்றி யாரும் பேனர் வைக்க கூடாது என எச்சரித்தார். இத்தனை நாட்களாக இல்லாமல், இப்போது மட்டும் மாநகராட்சி ஆணையர் இவ்வாறு கூறுவதற்கு என்ன காரணம் என விசாரித்தபோது, சசிகலா இன்று சென்னை வர உள்ளதால் அவரை வரவேற்க அதிமுக மற்றும் அமமுகவை சேர்ந்த பலரும் ஆங்காங்கே பேனர்களை வைக்க கூடும் என்பதால், அதை தடுக்க இவ்வாறு கூறியது தெரியவந்து.

இந்நிலையில், அம்மா கிளினிக் திறப்பு விழா வடசென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று நடந்தது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அவரை வரவேற்று பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. மாநகராட்சி ஆணையர் பேனர் வைக்கக்கூடாது என கூறியிருந்த நிலையில் நிகழ்ச்சி நடந்த அனைத்து இடங்களிலும் பேனர்கள் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவற்றை அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டம் என்பது  அனைவருக்கும் பொதுவானது. ஆனால், ஆளும்கட்சிக்கு ஒரு நிலைப்பாடும், மற்றவர்களுக்கு ஒரு நிலைப்பாடும் என மாநகராட்சி நிர்வாகம் செயல்படுகிறது, என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

'ஊருக்கு மட்டும் தான் உபதேசமா?'
சென்னையில் சைக்கிள் ஷேரிங் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ-பைக் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று நடந்தது. மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். அப்போது, அவர் அளித்த பேட்டியில், ‘‘சென்னை மாநகரில் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது, தடையை மீறி யார் பேனர் வைத்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார். ஆனால், அதை மீறி அதிமுக மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. இதனால், ஊருக்கு மட்டும் தான் உபதேசமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Tags : Banner culture re-emerging ,parties ,Corporation ,
× RELATED ஈரோடு மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை