ஊட்டி : ஊட்டி-கூடலூர் மாற்றுப்பாதையில் (கால்ப்லிங்ஸ் சாலை) விபத்துக்களை தவிர்க்க ஐந்து இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்ட நிலையில் கனரக வாகனங்கள் செல்வதை தவிர்க்க உயர தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் பிரதான சாலையில் பிங்கர்போஸ்ட் பகுதியில் இருந்து எச்பிஎப் பகுதிக்கு செல்ல இரு சாலைகள் உள்ளன.
பிரதான சாலையில் தற்போது எச்பிஎப் அருகே நீலகிரி அரசு மருத்தவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது.எனவே, இச்சாலையில் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் பல்வேறு இடங்களில் வேகத் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், வாகனங்கள் வேகமாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பெரும்பாலானவர்கள் மாற்றுப்பாதையான கால்ப் லிங்ஸ் சாலையை பயன்படுத்த துவங்கிவிட்டனர். வேகத் தடைகள் இல்லாத நிலையில்,அனைத்து வாகனங்களும் இதில் வேகமாக செல்கின்றன.இச்சாலையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செல்லும் நுழைவு வாயில்,தனியார் மகளிர் கல்லூரியும் உள்ளன.
இதனால் இச்சாலையில், விபத்து அபாயம் நீடித்தது. அதுமட்டுமின்றி காலை நேரங்களில் பலரும் இச்சாலையில் நடை பயிற்சி மேற்கொள்ளும் நிலையில், அவர்களுக்கும் விபத்து அபாயம் நீடித்தது. இதனை தொடர்ந்து ஊட்டி – கூடலூர் மாற்ற பாதையான கால்ப் லிங்ஸ் சாலையிலும் வேகத் தடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து, கால்ப்லிங்ஸ் சாலையில், அண்மையில் 5 இடங்களில் புதிதாக வேகத்தடைகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைத்தது. இந்நிலையில் டிப்பர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதை தடுக்கும் விதமாக கூடுதல் ஆட்சியர் அலுவலகம் அருகே உயர் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கனரக வாகனங்கள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது.
