×

நட்டாத்தியில் மழைக்காலத்தில் போக்குவரத்து துண்டிப்பை தவிர்க்க தரைமட்ட பாலங்கள் உயர்த்தி கட்டப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஏரல், பிப்.8: பெருங்குளத்தில் இருந்து சாயர்புரம் செல்லும் சாலையில் நட்டாத்தியில் மழைக்காலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்படுவதை தவிர்க்க அப்பகுதியில் உள்ள 3 தரைமட்ட பாலங்களை உயர்த்தி கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெருங்குளத்தில் இருந்து சாயர்புரம் செல்லும் மெயின் சாலையில் நட்டாத்தியில் 3 தரைமட்ட சிறிய பாலங்கள் உள்ளன. மழைக்காலத்தில் காட்டாற்று தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது இந்த பாலத்தின் கீழ் உள்ள மடை வழியாக கடந்து சென்று அங்குள்ள வாய்க்கால் வழியாக திருப்பணிசெட்டிகுளம் கிராமத்தில் செல்லும் வை. வடகால் வாய்க்காலில் இணைக்கப்பட்டு அங்கு செல்லும் தண்ணீருடன் சேர்ந்து பேய்க்குளம் குளத்திற்கு சென்று வருகிறது. தற்போது இந்த பாலத்தின் உயரம் குறைவாக இருப்பதால் மழைக்காலத்தில் அதிக அளவு தண்ணீர் வரும் போது பாலத்தின் கீழ் உள்ள மடை வழியாக தண்ணீர் செல்ல முடியாமல் இந்த 3 இடங்களிலும் சாலையை கடந்து செல்கிறது.

இதனால் பெருங்குளத்தில் இருந்து பண்டாரவிளை, நட்டாத்தி வழியாக சுப்பிரமணியபுரம், சாயர்புரம் செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதனால்  இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, இங்குள்ள 3 தரைமட்ட பாலத்தையும் உயர்த்தி கட்டினால் மழைக்காலத்தில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் பாலத்தின் கீழ் பகுதி வழியாக கடந்து சென்றுவிடும். பொதுமக்கள் நலன் கருதி இந்த மூன்று பாலத்தையும் உயர்த்தி கட்டிட  நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து திமுக முன்னாள் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் நட்டாத்தி காளிதாஸ் பண்ணையார் கூறியதாவது; ‘மழைக்காலத்தில் காட்டாற்று தண்ணீர் அதிக அளவு பெருக்கெடுத்து வரும் போதெல்லாம் நட்டாத்தியில் இருந்து சுப்பிரமணியபுரம் செல்லும் சாலையில் உள்ள 3 தரைமட்ட பாலத்தின் மடைகள் வழியாக கடந்து செல்லும். தற்போது இந்த மடைகள் அனைத்தும் தூர்ந்து போன நிலையில் தண்ணீர் மடை வழியாக செல்ல முடியாமல் அந்த இடத்தில் சாலை மீது ஏறி கடந்து செல்கிறது. இதனால் தொடர்ந்து 4 நாட்களுக்கு மேலாக இவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதேபோல் கடந்த மாதம் பெய்த மழையினால் 4 நாட்கள் இவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. எனவே அரசு நடவடிக்கை எடுத்து இந்த 3 தரைமட்ட பாலத்தையும் உயர்த்தி கட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : bridges ,season ,Nattadi ,
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...