×

தச்சநல்லூர் உலகம்மன் கோயிலில் நாளை திருமாலை பூஜை விழா

நெல்லை, பிப். 8: தச்சநல்லூர் உலகம்மன் கோயிலில் திருமாலை பூஜை விழா நாளை (9ம் தேதி) நடக்கிறது. தச்சநல்லூர் வடக்கு புறவழிச்சாலையில் அமைந்துள்ள உலகம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தை கடைசி செவ்வாய்க்கிழமையன்று திருமாலை பூஜை விழா நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டுக்கான திருமாலை பூஜை விழா நாளை (9ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி இன்று இரவு இரவு 9.30 மணிக்கு குடி அழைப்பு, வீதியுலா, அதைத்தொடர்ந்து அம்மனுக்கு மாக்காப்பு பூஜை நடக்கிறது. நாளை (9ம் தேதி) காலை 8 மணிக்கு தச்சநல்லூர் வரம்தரும் பெருமாள் கோயிலில் இருந்து புறப்படும் பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக உலகம்மன் கோயிலை சென்றடைந்ததும் பிற்பகல் 2 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் முதலான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறும்.

முன்னதாக மதியம் 12 மணிக்கு பிரசாதம் வழங்கப்படும். விழாவின் சிகரமாக நாளை மாலை 6 மணிக்கு அனைத்து வீதிகளிலும் ஒவ்வொரு வீட்டு வாசல் முன்பாக பொங்கலிட்டு அம்மனுக்கு படைக்கும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இரவு 11  மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளியதும் வீதியுலா நடைபெறும். மறுநாள் (10ம் தேதி) காலை 6 மணிக்கு கோயிலை சப்பரம் வந்தடைந்ததும் படப்பு பூஜை, சிறப்பு தீபாராதனை நடக்கிறது. வரும் 16ம் தேதி 8ம் பூஜை நடக்கிறது. திருமாலை பூஜை விழாவில் நெல்லை மட்டுமின்றி தேனி, போடி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாகப் பங்கேற்கின்றனர்.  ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தேவி, பாளை மேற்கு ஆய்வாளர் முருகானந்தம், உலகம்மன் பக்த சேவா குழுவினர் செய்துள்ளனர்.

Tags : Tirumalai Pooja ,Dachanallur Ulagamman Temple ,
× RELATED தச்சநல்லூர் உலகம்மன் கோயிலில் பிப்.8ல் திருமாலை பூஜை