×

பள்ளிகள், கல்லூரிகள் இன்று திறப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்

சேலம், பிப்.8: பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்படுவதையொட்டி, மாணவர்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் வந்தையடுத்து, படிப்படியாக கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் தேதி முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கும், டிசம்பர் 7ம் தேதி இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதேபோல், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் 19ம் தேதி நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று (8ம் தேதி) 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புகள், கல்லூரிகளில் அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் வகுப்புகளை துவங்க அரசு அனுமதியளித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும். சோப், சானிடைசர் உள்ளிட்ட போதிய உட்கட்டமைப்பு வசதிகள் செய்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்கள், முடிவுகள் வரும் வரை வீட்டிலேயே இருக்க வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்,’ என்றனர்.

Tags : Schools ,colleges ,health officials ,
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...