×

விளைநிலங்களில் உயர் மின்கோபுர பிரச்னை விவசாயிகளுடன் அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

பள்ளிபாளையம், பிப்.8: உயர்மின் கோபுரம் தொடர்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளுடன், நேற்று இரவு மின்துறை அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து உண்ணாவிரத போராட்டம் தொடருமென போராட்ட குழு தலைவர் ஈசன் தெரிவித்துள்ளார். உயர்மின் கோபுரம் அமைக்க கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி, பாதிக்கப்பட்ட விவசாயிகள், நேற்று பள்ளிபாளையம் அடுத்த ஆலாம்பாளையத்தில் உள்ள மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டின் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த சென்றபோது 180 பேரை போலீசார் தடுத்து கைது செய்தனர். இதில் 21 பேர் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர்.
இந்நிலையில் நேற்று மாலை, பள்ளிபாளையம் பயணியர் மாளிகையில், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் தலைமையில், சங்க பிரதிநிதிகள் அமைச்சர் தங்கமணியை  நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என நினைத்த நிலையில், அமைச்சரை சந்திக்க சென்றவரகள் 10 நிமிடத்தில் அங்கிருந்து வெளியேறினர்.

இதுகுறித்து சங்க தலைவர் ஈசன் கூறுகையில், ‘உயர்மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் நிலம் பறிக்கப்பட்டது. 4 ஆண்டுகளாக உரிய இழப்பீடு கேட்டு போராடி வருகிறோம். மின்துறை அமைச்சரை கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.அரசின் கவனத்தை ஈர்க்க அமைச்சர் வீட்டின் முன்பு உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. இன்று (நேற்று) பேச்சுவார்த்தையின் போது விவசாயிகள் தரப்பில் மனு கொடுக்கப்பட்டது. அதை வாங்கி படித்த அமைச்சர், விவசாயிகளின் பிரதிநிதியான என்னிடம் பேச மறுத்துவிட்டார். அரசியல் செய்வதாகவும், தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது தவறு என்றும், எங்கள் விளைநிலங்கள் வழியாக மின்கோபுரம் அமைத்தது சரி என்றும் நியாயப்படுத்தினார்.

எங்கள் கோரிக்கை குறித்து அவர் கேட்கவே இல்லை. வேறு வழியின்றி வெளியேறினோம். கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடைபெறும். கைது செய்த எங்களை இதுவரை போலீசார் விடுவிக்கவில்லை. சிறை வைத்துள்ள இடத்தில் இருந்து எங்களை வெளியேற்றினால் வீட்டுக்கு செல்ல மாட்டோம். வீதியில் தான் படுப்போம்,’ என்றார்.

Tags : mink tower ,croplands ,talks ,Minister ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து...