×

மருந்துகளின் விலையை குறைக்க ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும்

தர்மபுரி, பிப்.8: மருந்துகளின் விலையை குறைக்க மருந்துகளின் மீதான ஜிஎஸ்டி வரியை முழுமையாக நீக்க வேண்டும் என்று, தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பிரபாகர் தேவதாஸ் தர்மபுரியில் தெரிவித்தார்.தர்மபுரி நகராட்சி மகளிர் பள்ளி வளாகத்தில், தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க ஆண்டு பேரவை கூட்டம் நேற்று நடந்தது. தர்மபுரி கிளை தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். சிஐடியூ மாநில செயலாளர் நாகராஜன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில், நிர்வாகிகள் ஜெயக்குமார், கோபி, பிரபு, செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் பிரபாகர் தேவதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்பட்டதை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை மருந்து நிறுவனங்களை புனரமைத்து, அனைத்து அத்தியாவசிய மருந்துகளை தயாரிப்பதற்கான மூலக்கூறுகளையும், மருந்துகளையும், தடுப்பூசிகளையும் குறைந்த விலையில் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருந்துத்துறையில் முறையற்ற விற்பனையை தடை செய்யும் வகையில், கட்டாய விதிமுறைகளை உள்ளடக்கிய பொது ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருந்துகளின் விலையை குறைக்க, மருந்துகளின் மீதான ஜிஎஸ்டி வரியை முழுமையாக நீக்க வேண்டும். ஆன்லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும். இவ்வாறு பேட்டியில் கூறினார்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா