×

பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்ற ‘வீரா ராஜா வீரா’ பாடல் இசை கோர்வை விவகாரத்தில் சட்டப்படி தீர்வு: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

சென்னை: பொன்னியின் செல்வன் 2 பட பாடல் விவகாரத்தில் ஜூனியர் தாகர் சகோதரர்களுக்கு அங்கீகாரம் வழங்க உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்தது தொடர்பாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கமளித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் இடம்பெற்ற வீர ராஜா வீரா என்ற பாடலின் இசைக்கோர்வை ஜூனியர் தாகர் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் நசீர் பயாஸுதின் தாகர்,

அவரது சகோதரர் நசீர் ஜாகிருதின் தாகர் இணைந்து உருவாக்கிய ஷிவ் ஸ்துதி என்ற இசை ஆல்பத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறி இந்துஸ்தானி இசைக் கலைஞர் உஸ்தாத் பயாஸ் வாசிபுதின் தாகர் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் காப்புரிமை மீறல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், பாடலில் இடம்பெற்றுள்ள இசைக் கோர்வைக்கான அங்கீகாரத்தை வழங்குமாறு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உத்தரவிட்டிருந்தது. தனி நீதிபதியின் இந்த உத்தரவு இரு நீதிபதிகள் அமர்வால் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து உஸ்தாத் பயாஸ் வாசிபுதின் தாகர் தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குறிப்பிட்ட அந்த இசைக் கோர்வைக்கான அங்கீகாரத்தை ஜூனியர் தாகர் சகோதரர்களுக்கு வழங்குவதாக ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பொன்னியின் செல்வன் 2 பட தயாரிப்பாளரும் ஒப்புக் கொண்டனர். இந்த உத்தரவாதத்தை பதிவு செய்த உச்ச நீதிமன்றம், வீரா ராஜா வீரா பாடல் ஜூனியர் தாகர் சகோதரர்களின் ஷிவ் ஸ்துதி ஆல்பத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று ஐந்து வாரங்களில் அனைத்து சமூக வலைதளங்களிலும், ஓடிடி தளங்களிலும் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது வழக்கறிஞர் நர்மதா சம்பத் மூலம், வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த உத்தரவில், உச்ச நீதிமன்றம் தலையிடவுமில்லை, வழக்கின் தகுதி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. வழக்கு விசாரணையின் போது, சுமூக தீர்வு காணும்படி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதன் அடிப்படையில் மட்டுமே இசைக் கோர்வைக்கான அங்கீகாரத்தை வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

இசைக்கோர்வைக்கு அங்கீகாரம் வழங்கியது என்பது தானாக முன் வந்து வழங்கப்பட்டதே தவிர, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழங்கப்பட்டதல்ல. இசைக்கோர்வையின் உரிமை, பதிப்புரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் டெல்லி உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது. இசைக் கோர்வையை இயற்றியது யார்? அதன் உண்மைத்தன்மை மற்றும் காப்புரிமை மீறல் குறித்த கேள்விகளுக்கு இன்னும் விடை காணப்படவில்லை. இதற்கு சட்டப்படி, நீதிமன்றத்தில் தீர்வு காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags : A.R. Rahman ,Chennai ,Supreme Court ,Junior Thakar ,Mani Ratnam ,
× RELATED மருத்துவப் பணியாளர் தேர்வாணையம்...