×

மத்திய அரசை கண்டித்து 7வது நாளாக மருத்துவர்கள் உண்ணாவிரதம்

ஈரோடு,  பிப். 8:   ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதித்த மத்திய  அரசை கண்டித்து ஈரோட்டில் 7வது நாளாக மகளிர் மருத்துவர்கள் நேற்று  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு அரசு மருத்துவமனை  ரவுண்டானா அருகே உள்ள பெருந்துறை ரோட்டில் இந்திய மருத்துவ சங்கம்  (ஐ.எம்.ஏ) சார்பில், தனியார் மருத்துவர்கள் கடந்த 1ம் தேதி முதல் உண்ணாவிரத  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 7வது நாள் போராட்டமாக  ஐ.எம்.ஏ.,வின் மகளிர் அணியின் சார்பில், பெண் மருத்துவர்கள் நேற்று  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஈரோடு மகப்பேறு  மருத்துவர்கள் சங்க பொறுப்பாளர்கள் டாக்டர் நான்சி தலைமை தாங்கினார்.  

டாக்டர் பூர்ணிமா சரவணன் வரவேற்றார். மகளிர் அணி மாநில தலைவி டாக்டர்  சித்ரா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஐ.எம்.ஏ.,வின் தேசிய துணை  தலைவர் ராஜா, மாநில தலைவர் ராமக்கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு  கோரிக்கைகளை விளக்கி பேசினர்.  இதில், அலோபதி மருத்துவ முறையில் உள்ள  58வகையான அறுவை சிகிச்சைகளை ஆயுர்வேதா, சித்தா, யுனானி மருத்துவர்கள் உரிய  பயிற்சி மேற்கொண்டு மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருப்பதை திரும்ப  பெற வேண்டும். மிக்ஷோபதி (கலப்பின) மருத்துவமுறையும், நாடு முழுவதும் ஒரே  மருத்துவ முறையை செயல்படுத்த அமைக்கப்பட்ட 4 பேர் கொண்ட கமிட்டியினை  உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் நிறைவு :  ஈரோடு  ஐ.எம்.ஏ., சார்பில் நடந்து வந்த தனியார் மருத்துவர்கள் போராட்டம் 7வது  நாளுடன் நிறைவடைந்துள்ளது. இதன்தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில்  அடுத்தக்கட்ட உண்ணாவிரத போராட்டம் நடக்கும் எனவும், அதில், ஈரோடு ஐ.எம்.ஏ.,  நிர்வாகிகள் கலந்து கொள்ளவார்கள் என அச்சங்கத்தின் தேசிய துணை தலைவர் ராஜா தெரிவித்துள்ளார்.

Tags : Doctors ,government ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...