செயின் பறிக்க முயன்ற ரவுடியுடன் போராட்டம்: குளத்தில் தள்ளிவிட்டு பெண் கொலை: திருவட்டார் அருகே பயங்கரம்

குலசேகரம்: திருவட்டார் அருகே செயின் பறிக்க எதிர்ப்பு தெரிவித்த பெண்ணை குளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்த பிரபல ரவுடியை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். குமரி மாவட்டம் மேக்காமண்டபம் அருகே புனத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட். கேரளாவில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மேரி ஜெயா(45). இவர் நேற்று மாலை முளகுமூடு பகுதியில் உள்ள ரேஷன்கடைக்கு பொருட்கள் வாங்கச்சென்றார். ரேஷன் கடை திறக்கப்படாததால் மீண்டும் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அவர் பூந்தோப்பு நல்லப்பிள்ளைபெற்றான்குளம் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது முளகுமூடு பகுதியைச் சேர்ந்த மெர்லின்ராஜ்(35) என்பவர் மேரிஜெயா கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றார். அதிர்ச்சியடைந்த மேரிஜெயா கூச்சலிட்டபடி செயினை மீட்க போராடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்தனர். இதனால் செயினை பறிக்க முடியவில்லையே என ஆத்திரமடைந்த மெர்லின்ராஜ், மேரிஜெயாவை குளத்திற்குள் தள்ளி விட்டார். இதில் மேரிஜெயா நீரில் மூழ்கினார். இதற்கிடையே ஓடி வந்த அப்பகுதி பொதுமக்கள் மெர்லின்ராஜை மடக்கி பிடித்தனர். மேரி ஜெயா குளத்தில் மூழ்கியது குறித்து குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து குளத்தில் தேடுதல் வேட்டை நடத்தி மேரிஜெயா உடலை மீட்டனர். ஆனால் அவர் அதற்குள் பரிதாபமாக உயிரிழந்தார். பொதுமக்கள் மெர்லின்ராஜுக்கு தர்மஅடி கொடுத்து திருவட்டார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மெர்லின் ராஜ் முன்னாள் ராணுவவீரராவார். இவர் ராணுவத்தில் பணியில் இருந்தபோது, நடத்தை சரியில்லாததால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டவர் ஆவார். அவர் மீது திருவட்டார், தக்கலை உள்ளிட்ட காவல்நிலையங்களில் அடிதடி, மிரட்டல் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்று பொதுமக்கள் தர்மஅடி கொடுத்ததால் காயமடைந்த மெர்லின்ராஜை போலீசார் பிடித்து தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேரிஜெயா உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த மேரிஜெயாவுக்கு 17 மற்றும் 18 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த கொலைச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>