×

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்'நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் தொண்டர்கள் உற்சாகம்

தூத்துக்குடி, பிப். 5: உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதம் முடிகிறது. இதை முன்னிட்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பிரசார பயணத்தை துவங்கியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (5ம் தேதி) சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதற்காக நேற்று 4ம் தேதி  ராமநாதபுரம் மாவட்ட நிகழ்ச்சிகளை நிறைவுசெய்தபிறகு பரமக்குடியில் இருந்து கார் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் வந்த மு.க. ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான பந்தல்குடி விலக்கில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் மேளதாளம் முழங்க கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  மேலும் கோவில்பட்டி மற்றும் வழிநெடுகிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வரவேற்று ஆங்காங்கே டிஜிட்டல் பேனர்கள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை கவர்ந்தது. குறிப்பாக சாலையின் இருபுறமும் கட்சி கொடிகள்,  தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது கண்கொள்ளாகாட்சியாக இருந்தது.

இந்நிலையில் கோவில்பட்டி எட்டயபுரம் ரோடு கலைஞர் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார். மதியம் 1 மணிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஏற்பாடு செய்துள்ள வைகுண்டம் தொகுதி, நட்டாத்தி பஞ்சாயத்து பட்டாண்டிவிளையில் நடக்கும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில்' பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று சிறப்புரையாற்றுகிறார். தூத்துக்குடி மாவட்ட நிகழ்ச்சிகளை நிறைவுசெய்தபிறகு நெல்லை செல்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகையால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

Tags : Stalin ,constituency ,tour volunteers ,MK Stalin ,Thoothukudi district ,
× RELATED கடும் நிதி நெருக்கடியிலும்...