எட்டயபுரம் அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் 4 பெண்களிடம் 16 பவுன் பறிப்பு மர்மநபர்களுக்கு போலீஸ் வலை

எட்டயபுரம். பிப். 5:  எட்டயபுரம் அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பெண்கள் 4 பேரிடம் 16 பவுன் நகை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  எட்டயபுரம் அருகே இளம்புவனத்தில் பூமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு  சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து கோபுரகலசத்திற்கு  புனித நீர் அபிஷேகம் நடந்தது. இதில் ெபண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், பெண்கள் 4 பேரிடம் 16 பவுன் தங்கநகைகளை பறித்துச் சென்றனர். இளம்புவனம் செண்பகாநகரை சேர்ந்த ஆறுமுகம் மனைவி  சண்முகம்மாளிடம் (50) 5 பவுன் நகை, சின்னமுத்து மனைவி ஆவுடையம்மாளிடம் (63) 3 பவுன், மந்திரம் மனைவி பேச்சியம்மாளிடம் (60) 5 பவுன், பால்சாமி மகள் முருகேஸ்வரியிடம் (50) 3 பவுன் என மொத்தம் 16 பவுன் நகை பறிபோனது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் எட்டயபுரம் போலீசார் வழக்குப் பதிந்து மர்மநபர்களைத் தேடிவருகின்றனர்.

Related Stories:

>