பொய்கைநல்லூர் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி விநியோகம்

நாகை, பிப். 5: நாகை அருகே ரேஷன் கடையில் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி 20 கிலோ வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் அரிசி தரமற்று இருப்பதாக புகார்கள் வருகிறது. இந்நிலையில் நாகை அருகே தெற்கு பொய்கைநல்லூரில் உள்ள ரேஷன் கடையில் வழங்கப்பட்ட விலையில்லா அரிசியில் புழுக்கள் இருப்பதால் அப்பகுதி மக்கள் அதை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அரிசி நிறம் மங்கி துர்நாற்றத்துடன் காணப்படுகிறது. பூசனம் பிடித்து வண்டுகள் நிரம்பிய நிலையில் விலையில்லா அரிசி விநியோகம் செய்யப்படுகிறது.

இதுமட்டுமின்றி விலை கொடுத்து வாங்கும் பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களும் தரமற்றதாகவே வழங்கப்படுவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மூட்டையில் வரும் பொருட்களை விநியோகம் செய்கிறோம். நாங்கள் உற்பத்தி செய்து இதுபோல் புழு நிறைந்த பொருட்களை விநியோகம் செய்யவில்லை என்று பொருட்கள் வாங்க வருவோர்களிடம் விற்பனையாளர் தெரிவிக்கிறார். தரமற்ற ரேஷன் பொருட்களை வாங்கி பயனில்லையென பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ரேஷன் கடையில் தரமான பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>