×

புயலால் சேதமடைந்த நாகூர் தர்கா குளம் சீரமைக்கும் பணி காணொளியில் முதல்வர் துவக்கி வைப்பு

நாகை, பிப். 5: புயலால் சேதமடைந்த நாகூர் தர்கா குளம் சீரமைக்கும் பணியை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். நிவர், புரெவி புயல் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதில் பல லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி பயிர்கள் சேதமடைந்தது. இந்நிலையில் நாகூரில் உள்ள புகழ்பெற்ற தர்காவுக்கு சொந்தமான தர்கா குளத்தின் தென்கரை மற்றும் கீழ்கரை பகுதிகளில் உள்ள சுவர்கள் டிசம்பர் 5ம் தேதி இடிந்து விழுந்தது. இதனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் மணல் மூட்டைகளை அடுக்கி மேலும் சேதம் ஏற்படாமல் சீரமைக்கப்பட்டது.

இவ்வாறு தொடர் மழையில் சேதமடைந்த இடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிசம்பர் 9ம் தேதி பார்வையிட்டார். அப்போது நாகூர் தர்கா குளத்தையும் பார்வையிட்டு சீரமைக்க ரூ.5.37 கோடி ஒதுக்கீடு செய்யப்படுள்ளதாக ஜனவரி 24ம் தேதி அறிவித்தார். இதைதொடர்ந்து ரூ.4.37 கோடியில் நாகூர் தர்கா குளத்தை சீர் செய்யும் பணி மற்றும் ரூ.1 கோடி குளத்தை சுற்றி நடைபாதை அமைக்க வீடியோ கான்பரன்சிங் மூலம் சென்னையில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார். நாகூர் தர்கா குளத்தில் கலெக்டர் பிரவீன்பிநாயர், தாசில்தார் ராமதேவி, அதிமுக நகர செயலாளர்கள் தங்ககதிரவன், செய்யதுமீரான் மற்றும் பலர் பங்கேற்றனர்.

காரைக்கால், பிப். 5: காரைக்காலில் 1,000 ஆண்டுகள் பழமையான கார்கோடகபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காரைக்கால் மாவட்டம் காக்கமொழியில் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கார்கோடகபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சோழர்கள் காலத்தில் கும்பாபிஷேகம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரி அரசு சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பில் கோயில் புனரமைக்கப்பட்டு திருப்பணி வேலைகள் துவங்கியது. இதையடுத்து கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 2ம் தேதி துவங்கியது. நேற்று காலை நான்காம்கால யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்னர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏ கீதா ஆனந்தன் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Chief Minister ,pond ,storm ,Nagore Dargah ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...