×

போராட்ட கால ஒழுங்கு, குற்ற நடவடிக்கை ரத்து கோரிக்கைகளுக்கு விடை இல்லாதது ஏமாற்றம்


நெல்லை, பிப். 5:  ஆசிரியர்கள் மீதான போராட்ட காலத்தின் ஒழுங்கு மற்றும் குற்ற நடவடிக்கைகளை ரத்து செய்துள்ள தமிழக அரசு, கோரிக்கைகள் நிறைவேற்றும் அறிவிப்பை வெளியிடாதது வேதனையை தருகிறது என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது. ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019 ஜனவரி இறுதியில் நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். போராட்டத்தை ஒடுக்க தமிழக அரசு பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில்  போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மற்றும்  அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் நடவடிக்கைளை
தமிழக அரசு ரத்து  செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நெல்லை மாவட்ட செயலாளர் பால்ராஜ் கூறியதாவது: போராட்ட களத்திலும் சிறைச் சாலையிலும்  வரலாறு காணாத அளவுக்கு ஆசிரியர்கள் அவமானப்படுத்தப்பட்டனர். இது இன்றும் நெஞ்சில் ஆறாத  காயங்களாக உள்ளன. இவை மறக்கவும், மன்னிக்கவும் முடியாத நிகழ்வுகள். ஒழுங்கு  நடவடிக்கையால் பணி ஓய்வு பெற அனுமதிக்கப்படாமலும் பதவி உயர்வு  அளிக்கப்படாமலும் 2 ஆண்டுகளுக்கு கொடுந்துயரத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். தமிழக அரசின் அறிவிப்பு மிகவும் காலதாமதம் என்றாலும் ஆரம்பப் பள்ளி  ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது. அதேநேரத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின்  கோரிக்கைகள் தொடர்பாக எதுவும் அறிவிக்காதது மிகப்பெரிய ஏமாற்றத்தை  அளித்துள்ளது. முதல்வரின் அறிவிப்பில் கோரிக்கைகள் குறித்து ஒரு வார்த்தைகூட இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இது காயப்படுத்துவதாக உள்ளது. எனவே தாமதமின்றி முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றும் அறிவிப்பை அரசு உடனே வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : strike action ,proceedings ,cancellation ,
× RELATED ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது...