×

காலி பணியிடங்களை நிரப்ப கோரி ஊட்டியில் மறியலில் ஈடுபட முயன்ற அரசு ஊழியர்கள் 65 பேர் கைது

ஊட்டி,பிப்.5: தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட முயன்ற அரசு ஊழியர்கள் 65 பேரை போலீசார் கைது செய்தனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், எம்ஆர்பி., செவிலியர்கள், பண்ணை பணியாளர்கள் உள்ளிட்டோர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாைல பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட 41 மாத காலத்தை பணி காலமாக கருதி ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்த ஊழியர்களுக்கு ரூ.50 லட்சமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்கிட வேண்டும். மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கிட அறிவித்த அரசாணையை அமுல்படுத்த வேண்டும்.

அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்திட வேண்டும். கொரோனா பணி பார்க்கும் அனைத்து துறை ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முத்துகுமார் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்ப்பபட்டது. தொடர்ந்து ஊட்டி - கூடலூர் சாலையில் ஊர்வலமாக சென்று மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர். மறியலில் ஈடுபட முயன்ற 65 பேரை கைது செய்தனர். ஊட்டி டவுன் டிஎஸ்பி., மகேஷ்வரன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

Tags : servants ,Ooty ,
× RELATED 1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை...