×

200 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும் தேர்தலில் நான் கட்டாயம் போட்டியிடுவேன்: பிரேமலதா அறிவிப்பு

சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். தேர்தலில் கட்டாயம் நான் போட்டியிடுவேன் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அளித்த பேட்டி: எங்க கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பம், இந்த முறை திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது தான்.

கேப்டன் இருக்கும்ேபாது 2016ம் ஆண்டிலேயே இந்த கூட்டணி அமைய வேண்டியது. திமுக தலைவர் கலைஞர் வந்து பழம் நழுவி பாலில் விழப்போகுதுன்னு சொன்னாரு. தற்போது பழம் நழுவி தேன் கலந்த பாலில் விழுந்தது. ஆனா 10 வருஷம் கழிச்சு தாமதமாக இன்றைக்கு இந்த கூட்டணி உறுதியாகி இருக்கிறது. இதை இந்த நேரத்திலே நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். எத்தனை நம்பர், எந்த தொகுதி, யார் வேட்பாளர்கள் என்பது எல்லாம் இதற்குப் பிறகு குழு அமைத்து முடிவு செய்யப்படும்.

தேமுதிக-திமுக இரண்டு கட்சிகளின் குழு இணைந்து பேசி, அதை முடிவு செய்யும். முதல்வர் மு.க.ஸ்டாலின் அதை அறிவிப்பார். ஒட்டுமொத்த தமிழக மக்களும் சரி, இரண்டு கட்சியை சேர்ந்தவர்களும், கூட்டணி கட்சியை சேர்ந்த அனைவரும் மிக சந்தோஷத்தோடு இந்த கூட்டணியை வரவேற்று இருக்கிறார்கள். அதனால இந்த கூட்டணி ‘200 பிளஸ்’ பெற்று அமோக வெற்றி பெறும். எத்தனை இடங்கள், ராஜ்யசபா சீட் ஆகியவற்றை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரிய நேரத்தில் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பிரேமலதா அளித்த பேட்டி: தேமுதிக அதிமுகவுக்கு சென்றதாக பத்திரிகையாளர்களும், யுடியூபர்களும் தான் தவறான செய்தியை பரப்பி கொண்டிருந்தார்கள். இன்றைக்கு திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டிருக்கிறது. வாக்குப்பெட்டி வைத்து அனைவரின் கருத்தையும் கேட்டோம்.

அந்த வகையில் தேமுதிக அனைத்து மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைவரிடமும் கலந்து பேசி அந்த மாவட்டத்தின் முடிவாக வாக்குப்பெட்டியில் செலுத்தினார்கள். அனைத்து மாவட்ட செயலாளர்கள், ஓட்டுமொத்த கட்சியும் இன்றைக்கு விரும்பியது திமுக கூட்டணியை தான். கேப்டனும், கலைஞரும் பல ஆண்டு காலம் நட்பில் இருந்தவர்கள். எங்களுடைய திருமணத்தை நடத்தி வைத்தவரே கலைஞர் தான்.

அறிவாலயத்துக்குள் போகும் போது எனக்கு கேப்டன் நினைப்பு தான் வந்தது. திருமணம் முடிந்து எங்கள் வரவேற்பு நடந்ததே அறிவாலயத்தில் தான். பல ஆண்டு காலம் அவர்கள் குடும்பமும், எங்கள் குடும்பமும் மிக நெருக்கமாக பழகியவர்கள் தான். அரசியல் என்றும் வரும் போதும், கூட்டணி என்று வரும் போது எத்தனையோ முறை பேசப்பட்டாலும் அது நிறைவேறாமலேயே இருந்தது. கண்டிப்பாக தேர்தலில் போட்டியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : DMK alliance ,Premalatha ,Chennai ,DMDK General Secretary ,DMK ,Chief Minister ,M.K. Stalin ,Anna Arivalayam ,DMDK General Secretary… ,
× RELATED மருத்துவப் பணியாளர் தேர்வாணையம்...