×

கல்லூரிகள் திறப்பு அறிவிப்புக்கு பின் மாணவர்களுக்கு இலவச டேட்டா எதற்கு?


கோவை, பிப். 5:  கல்லூரிகள் திறப்பு அறிவிப்பு வெளியிட்ட பின் மாணவர்களுக்கு எதற்காக 2 ஜி.பி. இலவச டேட்டா எதற்கு? என பேராசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி முதல் கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால், அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது. மாணவர்களும் ஆன்லைன் வகுப்புகளில் படித்து வந்தனர். ஆன்லைனில் பருவத் தேர்வுகளையும் எழுதினர். தற்போது, கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், அரசு கல்லூரிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. அதன்படி, கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி வரும் 8-ம் தேதி முதல் கலை அறிவியல், தொழில்நுட்ப மற்றும் பொறியியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படுகிறது. இதனால், தற்போது ஆன்லைனில் நடத்தப்பட்டு வரும் வகுப்புகள் மீண்டும் ஆப்-லைனில் (நேரடியாக) நடத்தப்படவுள்ளது.

இதற்கிடையில், தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான நான்கு மாதங்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா(தரவு) அட்டைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில், கோவை மாவட்டத்தை சேர்ந்த 62 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச 2 ஜி.பி. டேட்டா அட்டைகள் வழங்கப்படவுள்ளது. இவை, இணைய வழி வகுப்புகள் மூலம் மாணவர்கள் கல்வி கற்க பயன்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கைக்கு மாணவர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து இருந்தாலும், பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள், எதற்கு இப்போது இந்த இலவச 2 ஜி.பி. டேட்டா? எனவும், கடந்த 10 மாதங்களுக்கு மேலாக மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் இருந்தபோது அளிக்கப்படாத சலுகை தற்போது கல்லூரி திறக்கும்போது எதற்கு? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த இலவச டேட்டா மாணவர்களுக்கு இனி பயனில்லை எனவும், இது தேர்தலை முன் நிறுத்தி மாணவர்களுக்கு வழங்கப்படும் லஞ்சமாக பார்ப்பதாகவும் பேராசிரியர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவையை சேர்ந்த பேராசிரியர்கள் கூறியதாவது: மாணவர்களுக்கு கல்லூரிகள் வரும் 8-ம் தேதி திறக்கப்படுகிறது. இதன்பிறகு அவர்களுக்கு நேரடி வகுப்புகள் எடுக்கவுள்ளோம். பின்னர் எதற்கு அவர்களுக்கு இலவச டேட்டா?. அதுவும் தினமும் 2 ஜி.பி. வரை வழங்கியுள்ளனர்.  இது மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும்போது கொடுத்திருக்க வேண்டும். தற்போது, அளிக்கப்படும் டேட்டாவால் எந்த பலனும் இல்லை. இது மாணவர்கள் ஆன்லைனில் திரைப்படங்கள், வீடியோக்கள் பார்க்கவும், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த மட்டுமே அதிகளவில் பயன்படும். தேர்தல் நேரத்தில் மாணவர்களின் வாக்குகளை பெறுவதற்காக இப்படி ஒரு திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : announcement ,colleges ,opening ,
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...