ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 435 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. இரவில் இந்திய கடல் எல்லை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, மன்னார் மற்றும் நெடுந்தீவு கடல் பகுதியில் இருந்து ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் அச்சுறுத்தி விரட்டியடித்தனர். இதையடுத்து மீனவர்கள் வேறு பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அங்கும் வந்த இலங்கை கடலோர காவல் படை மற்றும் கடற்படை ரோந்து படகுகள் மீனவர்களின் படகுகளை சுற்றிவளைத்து சிறைபிடித்தனர்.
இதில் நான்கு விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். படகுகளில் இருந்த 22 மீனவர்களையும் கைது செய்தனர். கடலிலேயே மீனவர்களிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் மீனவர்களை படகுகளுடன் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று மேல் நடவடிக்கைக்காக மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இலங்கை கடற்படையின் இந்த சிறைபிடிப்பு நடவடிக்கையால் ராமேஸ்வரம் மீனவர்கள் மிகுந்த அச்சத்துடன் குறைந்த அளவே மீன்பிடித்து விரைவாகவே கரை திரும்பி விட்டனர். இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள், மரைன் போலீசார் மற்றும் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 22 மீனவர்களை கைது செய்து, 4 விசைபடகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த சம்பவம் மீனவக்குடும்பங்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
