×

திருமாவளவன் குறித்து அவதூறு பாஜ-விசிகவினர் இடையே மோதல்: 70 பேர் மீது வழக்கு, அரூரில் பரபரப்பு

அரூர்: அரூரில் பாஜவினர் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, விசிக தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறாக பேசியதற்கு விசிகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பைச் சேர்ந்த 70 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா அலுவலகம் முன்பு பாஜ பட்டியல் அணி சார்பாக, பட்டியல் இனமக்களுக்கு ஒன்றிய அரசு கொடுக்கும் நிதியை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துவதாக கூறி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் என்டிஏ கூட்டணி கட்சியின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, பாஜ மாவட்ட பட்டியல் அணி தலைவர் சரவணன், ஒன்றிய அரசின் நிதியை மடை மாற்றம் செய்வதை கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவன் கண்டிக்காதது ஏன்? எனக்கேட்டு விமர்சித்து பேசினார். அப்போது, அங்கு வந்த விசிகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சலசலப்பு ஏற்பட்டு, சிறிது நேரத்தில் அவர்களுக்குள் கைகலப்பாக மாறியது. அப்போது கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டது. பின்னர், பாஜவினரை கண்டித்து, விசிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த அரூர் போலீசார், இருதரப்பினரையும் சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இது குறித்து.

அரூர் போலீஸ் ஸ்டேஷனில், விசிக ஒன்றிய துணை செயலாளர் தீரன் என்ற தீர்த்தகிரி (38), பாஜ மாவட்ட தலைவர் சரவணன் உள்பட 50 பேர் மீது புகார் கொடுத்தார். அதேபோல், பாஜ மாவட்ட பொறுப்பாளர் கலையரசன், விசிகவினர் 20 பேர் மீது புகார் கொடுத்துள்ளார். இருதரப்பு புகார்களின் பேரில், மொத்தம் 70 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : BJP ,VKC ,Thirumavalavan ,Aroor ,
× RELATED ரம்ஜான் பண்டிகையையொட்டி...