×

11 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி

கோவை, பிப். 5: கோவையில் உள்ள 11 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த 16ம் தேதி முதல் நடந்து வருகிறது. அதன்படி, கோவை அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 21 மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நடக்கிறது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தினமும் மையத்திற்கு நூறு பேர் வீதம் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது வரை 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 59 ஆயிரத்து 650 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால், தினமும் ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட்டால் மட்டுமே விரைந்து முடிக்க முடியும். இதையடுத்து, தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி மையம் அமைக்க மாவட்ட சுகாதாரத்துறையினர் முடிவெடுத்தனர். அதன்படி, கோவை ராயல்கேர் மருத்துவமனை, பி.எஸ்.ஜி. மருத்துவமனை, கே.எம்.சி.எச்., குப்புசாமி நாயுடு, ராமகிருஷ்ணா, கே.ஜி., கங்கா, கொங்குநாடு, கற்பகம் உள்பட 11 தனியார் மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகளில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Corona ,hospitals ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...