×

மத்திய அரசை கண்டித்து மருத்துவர்கள் 4வது நாளாக உண்ணாவிரதம்

ஈரோடு, பிப்.5: ஆயுர்வேத டாக்டர்கள் அலோபதி முறையில் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து  மத்திய அரசை கண்டித்து ஈரோட்டில் தனியார் மருத்துவர்கள் 4வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே உள்ள பெருந்துறை ரோட்டில் இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) சார்பில் தனியார் மருத்துவர்கள் கடந்த 1ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 4வது நாளாக நேற்று நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு, ஈரோடு ஐ.எம்.ஏ. மாவட்ட செயலாளர் செந்தில்வேலு தலைமை தாங்கினார். ஐ.எம்.ஏ.,வின் தேசிய துணை தலைவர் சி.என்.ராஜா முன்னிலை வகித்தார். இதில், முன்னாள் மாவட்ட தலைவர் சுகுமார், டாக்டர்கள் வீரசிவம், தங்கவேலு மற்றும் ஈரோடு, பவானி, சத்தி, கோபி, அந்தியூர், குமாரபாளையத்தை சேர்ந்த ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து ஐ.எம்.ஏ. ஈரோடு கிளை பொருளாளர் டாக்டர் சுதாகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:அலோபதி மருத்துவ முறையில் உள்ள 58 வகையான அறுவை சிகிச்சைகளை ஆயுர்வேதா, சித்தா, யுனானி மருத்துவர்கள் செய்யலாம் என மத்திய அரசு கூறியிருப்பதை எதிர்த்து 4வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அவரவர் துறை சார்ந்த மருத்துவ முறைகளை பின்பற்ற சிகிச்சைகளை செய்ய வேண்டும். எம்.பி.பி.எஸ். படிப்பவர்கள் 2ம் ஆண்டில் இருந்தே மருத்துவமனையில் இருந்து 5 ஆண்டுகள் அனுபவத்தை பெற்று அறுவை சிகிச்சை செய்கின்றனர். இது ஒரு கலை. இதை ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவர்கள் எந்த ஒரு அனுபவமும் இல்லாமல் திடீர் என கையில் கத்தி எடுத்து அறுவை சிகிச்சை செய்வது ஆபத்தில் முடியும். எங்களது போராட்டம் வரும் 7ம் தேதி இரவுடன் நிறைவடையும். அதன்பின், அடுத்த 7 நாட்களுக்கு ஐ.எம்.ஏ.வின் மகளிர் அமைப்பை சேர்ந்தவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள். எங்களது போராட்டத்தின் நோக்கமே, மத்திய அரசின் இந்த அறிவிப்பு நடைமுறையானால் அதில் உள்ள ஆபத்து குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஆகும். அதுதொடர்பாக துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

Tags : Doctors ,government ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...