×

பொதுப்பணித்துறை அலட்சியத்தால் கூடலூர் அணைக்கட்டு மதகுகள் சேதம்

திருமயம், பிப்.5: பொதுப்பணித்துறை அலட்சியத்தால் கூடலூர் அனைக்கட்டு மதகுகள் சேதமடைந்துள்ளன. கண்மாயிகள் நிலை கேள்விக்குறியாக உள்ளதால் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் தெற்கு வெள்ளாறும் ஒன்று. 2012ம் ஆண்டு பெய்த மழையின்போது நீர் கரைபுரண்டு ஓடியது. அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் தொடர் வறட்சி காரணமாக வெள்ளாறு உட்பட அனைத்து ஆறுகளும் 8 ஆண்டுகளுக்கு மேலாக வறட்சியை சந்தித்து வருகிறது. இதனால் அரிமளம் பகுதிகளில் விவசாயம் முற்றிலும் முடங்கியது. நிலத்தடி நீரை மட்டும் நம்பி குறைவான ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. அதிலும் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாய பயிர்கள் கருகுவதால் அடுத்தடுத்த ஆண்டுகளில் விவசாயம் செய்ய விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

அரிமளம் பகுதியில் வெள்ளாறு பாய்ந்தாலும் விவசாயத்திற்கு அப்பகுதி மக்கள் கண்மாய் பாசனத்தையே முழுமையாக நம்பி இருந்தனர். வெள்ளாற்றின் குறுக்கே அணை கட்டி அதன் மூலம் நீரை கண்மாயில் நிரப்ப வேண்டும் என அப்பகுதி மக்கள் விடுத்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 1992ம் ஆண்டில் அரிமளம் அருகே உள்ள கூடலூர் பகுதியில் வெள்ளாற்றின் குறுக்கே சேத்துகண்மாய் அணைகட்டு கட்டப்பட்டது. இதனை தொடர்ந்து வெள்ளாற்றில் வரும் நீரை சேத்துகண்மாய் அணை மூலம் தேக்கி அங்கிருந்து நீரை கால்வாய் மூலம் அரிமளம், கீழப்பனையூர், தாஞ்சூர், இசுகுபட்டி, கீரணிப்பட்டி உள்ளிட்ட கிராம கண்மாயில் நிரப்பி உபரிநீர் மீண்டும் வெள்ளாற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் அப்பகுதியில் பல்லாயிரகணக்கான ஏக்கரில் விவசாயம் செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மழையில்லாமல் ஆறுகள் வறண்டு போயின. இதனால் வெள்ளாறு அணையில் இருந்து அரிமளம் கண்மாய்க்கு நீர் செல்லும் கால்வாய் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு, கால்வாய் உட்பகுதியில் கருவேல மரங்கள், புதர் செடிகள் மண்டி காடு போல் காட்சியளிக்கிறது. பொதுப்பணி துறையின் தொடர் பராமரிப்பு இல்லாததால் ஆற்றில் இருந்து அரிமளம் பகுதி கண்மாய்க்கு நீர் திறக்கும் மதகுகள் திறக்க முடியாத அளவுக்கு இறுகி சேதமடைந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வெள்ளாறில் தகுந்தளவு நீர் சென்ற நிலையில் அரிமளம் பகுதியில் உள்ள கண்மாய்க்கு நீர் திறக்கும் மதகுகள், கால்வாய் சேதமடைந்து காணப்படுவதால் நீர் திறக்கமுடியாமல் ஆற்றில் நீர் வீணாகி சென்றதாக அப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரிமளம் பகுதி கண்மாய்க்கு வெள்ளாற்றில் இருந்து நீர் வரும் மதகுகள் மற்றும் கால்வாய் சேதங்களை உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுத்தால் அதன் மூலம் நடப்பாண்டு பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யலாம் என விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், மழைநீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்த அரிமளம் பகுதி விவசாயிகளுக்கு வெள்ளாற்று அணை மூலம் போதுமான நீர் கிடைத்ததால் இரு போக விவசாயம் நடைபெற்று வந்தது. தற்போது வறட்சியால் ஆறுகள் வறண்டு, நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்ததால் ஒரு போக விவசாயத்திற்கு நீர் கிடைப்பதே குதிரை கொம்பாகி போய்விட்டது. வறட்சியினால் ஆறு, நீர் வரத்து வாரிகள், கண்மாய்களை பராமரிப்பதில் யாரும் அக்கரை காட்டவில்லை. இதனால் அரிமளத்திற்கு நீர் வழங்கும் கூடலூர் அணைகட்டு மதகுகள் சேதமடைந்து, கால்வாய்கள், கண்மாய்கள் சிதிலமடைந்து கிடக்கிறது.

நீருக்காக கூடலூர் அணையை மட்டுமே நம்பியிருக்கும் 22 கண்மாய்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. பொதுப்பணி துறையின் அலட்சியத்தாலும், முன்னெச்செரிக்கை நடவடிக்கை இல்லாத நிலையை காட்டுகிறது என்றனர்.

Tags : Kudalur Dam ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ