சென்னை: தமிழ்நாட்டில் மதமாற்றம் என்று பொய் உரைத்து பொது அமைதியை சீர்குலைக்க முயன்ற பாஜக அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரியலூரைச் சேர்ந்த மாணவி லாவண்யா, தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகில் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதயமேரி பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த 2022 ஜனவரி மாதம் 16 ஆம் தேதி விஷம் குடித்து உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி19 ஆம் தேதி இறந்தார்.
பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி லாவண்யா, அவரது சித்தி கொடுமை, பள்ளியில் கொடுத்த கூடுதல் பணி போன்றவற்றால் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்பட்டது. ஆனால் பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் பாஜக குற்றஞ்சாட்டியது. இதனை மாவட்ட காவல்துறை முற்றிலுமாக மறுத்தது.
மருத்துவமனையில் இருந்த லாவண்யாவிடம் அரியலூர் மாவட்ட விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த ஒருவர் பேசும் காணொளி ஒன்றை அப்போதைய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டிருந்த வார்டிற்கு சென்று, அவர் உடல்நிலை மோசமான நிலையிலிருந்த போது காணொளி எடுக்கப்பட்டுள்ளது. அதில் மாணவி லாவண்யா , விடுதியில் தங்கிப் படித்த தூய இருதய மேரி பள்ளியில் தனக்கு நேர்ந்த துன்பங்கள் மற்றும் எப்படியெல்லாம் சிஸ்டர் சகாய மேரி என்பவர் தன்னை வேலை வாங்கி கொடுமைப்படுத்தினார் என்பதை மாணவி கூறி இருந்தார். விஎச்பி நபர் எடுத்த காணொளியை, பாஜக அண்ணாமலை வெளியிட்டு, மாணவியின் மரணம் கட்டாய மதமாற்றம் மூலம் தான் நடந்துள்ளது என்பதைப் பதிவு செய்து பொய் உரைத்தார்.
இறுதியாக, மாஜிஸ்ட்ரேட் முன்பு லாவண்யா வாக்குமூலம் அளித்த போதும் விடுதி காப்பாளரான சகாய மேரி, விடுதி தொடர்பான பல பணிகளை தொடர்ந்து தனக்கு ஒதுக்கியதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தன்னால் ஒழுங்காக படிக்க முடியவில்லை என கூறியிருக்கிறார். தன்னை படிக்க விடாமல் சகாய மேரி தடுத்து துன்புறுத்தினார். தான் பூச்சி மருந்தை குடித்ததற்கு காரணமும் அவர்தான். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மரண வாக்கு மூலத்தில் லாவண்யா கூறி இருக்கிறார். அதன் பிறகு இந்துத்துவ மத அடிப்படைவாதிகளால் மிகப்பெரிய பிரச்சாரமாக இது மாற்றப்படுகிறது.
அதாவது தமிழ்நாட்டில் உள்ள அணைத்து பள்ளிகளிலும் இதுபோன்ற மதமாற்றம் நடைபெறுகிறது என்ற பொய்யான பிம்பத்தைக் கட்டமைத்தார்கள். பா.ஜ.க, சமூக வலைத்தள பக்கத்தில் லாவண்யாவுக்கு நீதி வேண்டும் என்ற (#JusticeForLavanya) ஹேஸ்டேக்கை வைரலாக்கியது. ஊடகங்களில் விவாதப் பொருளானது. அதன் பிறகு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) கட்டாய மதமாற்றம் நடந்திருக்கிறது என்று கூறி விசாரணைக்கு வந்தது. தொடக்கம் முதலே தமிழ்நாடு அரசும், காவல்துறையும் மதமாற்றம் தொடர்பான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறின.
ஆனால், காவல்துறை பொய் சொல்லிக் குற்றத்தை மூடி மறைக்கிறது என்று பாஜகவும் அதனுடைய சங் பரிவார அமைப்புகளும் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து இதனை தேசிய பிரச்சனையாக மாற்றின.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா டெல்லியில் இருந்து பாஜக குழுவை மைக்கேல் பட்டிக்கு அனுப்பி, தமிழ்நாட்டில் மதமாற்றம் நடக்கிறது என்று பரப்புரை செய்தார். இவ்வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். தமிழ்நாடு காவல்துறை இந்த வழக்கை விசாரிக்க கூடாது. சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் பாஜக பின்னணியில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
பொதுவெளியில் தன்னை சனாதனவாதியாகவே அடையாளம் காட்டிக் கொள்கிற நீதிபதி ஒருவர் இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டார். பின்னர் சி.பி.ஐ, தூய இருதய மேரி பள்ளியில் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், “பள்ளியில் சகாய மேரி என்கிற விடுதி காப்பாளர் மாணவிக்கு நிர்வாக வேலைகளை (Administratiive Work) கொடுத்து வந்ததால் அது மாணவியின் படிப்பிற்குப் பெரிய தொல்லையாக் இருந்துள்ளது. அடிக்கடி மாணவியைக் கண்டித்துள்ளனர். இதனால் தனக்கு அவமானம் நேர்ந்துவிட்டதாக நினைத்து மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்.
பள்ளியில் 677 மாணவர்கள் படிக்கின்றனர். அதில் 444 பேர் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 219 பேர் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 14 மாணவர்கள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். முக்கியமாகக் கிட்டத்தட்ட 2010 ஆம் ஆண்டு முதல் பள்ளியில் படித்த மாணவர்களுடைய மாற்றுச் சான்றிதழ்களை (TC) கொண்டு வரச் சொல்லி முழுவதுமாக சரிபார்த்ததில் பள்ளிப் படிப்பை முடித்து வெளியே சென்ற மாணவ மாணவிகள் யாரும் தங்களின் பெயரையோ, மாற்றுச் சான்றிதழில் மதத்தின் பெயரையோ மாற்றவில்லை” என்பதை உறுதி செய்தது. மதம் மாற்றியதாக எந்த மாணவ மாணவியும் தெரிவிக்கவில்லை; கட்டாய மதமாற்றம் பள்ளியில் நடந்ததற்கான எந்த சான்றுகளும் இல்லை” என்று சி.பி.ஐ தன்னுடைய விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் அண்ணாமலை தெரிவித்தது போல் லாவண்யா மரணம் மதமாற்றத்தினால் நடைபெறவில்லை. அது பொய் என்றும், தனக்குக் கொடுக்கப்பட்ட நிர்வாக வேலைகளால் படிக்க முடியாததன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாகவும் தன்னுடைய குற்றப் பத்திரிக்கையில் சி.பி.ஐ தெரிவித்தது.
இந்நிலையில்தான், உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது நடந்த விசாரணையின் போது, இந்த விவகாரத்தில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த அடிப்படையில் சிபிஐயும் தற்போது அறிக்கையை சமர்பித்திருக்கிறது.
அதில் குற்ற பத்திரிக்கையில் முன்பு கூறியிருந்தவாறே, மாணவி லாவண்யா மரணத்துக்கு மதமாற்றம் காரணம் அல்ல என உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை அளித்துள்ளது. மேலும் சிபிஐ தனது அறிக்கையில்,“சகாய மேரி லாவண்யாவை தற்கொலைக்கு தூண்டியது தெளிவாக வெளிப்பட்டுள்ளது. அவரின் இந்த செயல் ஐபிசி 305 மற்றும் சிறார் நீதி சட்டத்தின் பிரிவு 75 இன் கீழ் தற்கொலைக்கு தூண்டும் குற்றமாகும். எனவே இந்த அறிக்கையின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது விசாரணை நடத்தி அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
எனவே தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் மாணவி லாவண்யாவை தற்கொலைக்குத் தள்ளிய குற்றவாளிகள் மீதும், இந்த பிரச்சினையை மதமாற்றம் என்று பிரச்சாரம் செய்து, தமிழ்நாட்டின் பொது அமைதியை சீர்குலைத்து, அரசியல் ஆதாயம் தேட முயன்ற தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

