×

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மீண்டும் பணி கோரி பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் மனு

திருவாரூர், பிப்.5: திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் 40 பேர் மீண்டும் பணி வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனாவின் தாக்கமானது பின்னர் படிப்படியாக அதிகரித்ததன் காரணமாக வழக்கமான மருத்துவ பணியாளர்கள் கொண்டு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் தினக்கூலி அடிப்படையில் மருத்துவ பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆய்வக உதவியாளர்கள் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரிகளில் நியமிக்கப்பட்டனர்.
அதன்படி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 40 மருத்துவ பணியாளர்கள், 20 மருத்துவர்கள், 10 ஆய்வக உதவியாளர்கள் என மொத்தம் 70 பேர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நியமிக்கப்பட்டு கடந்த மாதம் வரையில் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு மருத்துவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.60 ஆயிரம், ஆய்வக உதவியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம், பல்நோக்கு மருத்துவ பணியாளர்களுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த பணியாளர்கள் அனைவரையும் கடந்த 31ம் தேதியுடன் மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் பணியிலிருந்து விடுவித்துள்ளது. இந்நிலையில் தங்களுக்கு வழங்கப்படவேண்டிய 3 மாத ஊதிய பாக்கியினை உடனடியாக வழங்கிட வேண்டும் மற்றும் மீண்டும் பணி வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் 40 பேரும்  கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து மருத்துவக் கல்லூரி டீன் முத்துக்குமாரனிடம் கேட்டபோது, கொரோனாவின் தாக்கம் அதிகரித்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இந்த 70 பேரும் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களுக்கு மாதமொன்றுக்கு ரூ.24 லட்சத்து 25 ஆயிரம் அரசு சார்பில் ஊதியமாக வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 200 பேர் வரையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது 10 எண்ணிக்கையில் மட்டுமே இருந்து வருகின்றனர்.

இதன் காரணமாகதான் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய 3 மாத ஊதிய தொகை அரசிடம் இருந்து பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு டீன் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

Tags : Thiruvarur Government Medical College Hospital ,
× RELATED திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி...