×

ஏஐ தாக்க மாநாட்டில் பங்கேற்க வந்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பிரதமர் மோடியுடன் சந்திப்பு: உலக தலைவர்கள் இன்று உரையாற்றுகின்றனர்

புதுடெல்லி: டெல்லியில் நடக்கும் ஏஐ தாக்க மாநாட்டில் பங்கேற்க வந்த கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை, பிரதமர் மோடியை சந்தித்து ஏஐ ஒத்துழைப்புகள் குறித்து பேசினார். டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்து வரும் ஏஐ தாக்க உச்சி மாநாட்டில் முக்கிய நிகழ்வாக இன்று 20க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், 60 அமைச்சர்கள் மற்றும் 500 உலகளாவிய ஏஐ நிறுவன தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். இதற்காக இந்தியா வந்துள்ள பல உலக தலைவர்கள் பிரதமர் மோடியை நேற்று சந்தித்தனர்.

கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட சுந்தர் பிச்சை பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘ஏஐ உச்சி மாநாட்டில் சுந்தர் பிச்சையை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏஐயில் இந்தியா செய்து வரும் பணிகள், இத்துறையில் நமது திறமையான மாணவர்கள் மற்றும் நிபுணர்களுடன் கூகுள் எவ்வாறு இணைந்து பணியாற்ற முடியும் என்பது குறித்து பேசினார்’’ என்றார்.

முன்னதாக சுந்தர் பிச்சை அளித்த பேட்டியில், இந்தியா செயற்கை நுண்ணறிவில் அசாதாரண பாதைக்கு தயாராக இருப்பதாகவும், இந்தியாவின் ஏஐ மாற்றத்தில் கூட்டு சேர்வதற்கு கூகுள் தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார். அமெரிக்கா, இந்தியா மற்றும் பூமியின் தெற்கு அரைக்கோளம் முழுவதும் பல நாடுகளுக்கு இடையே ஏஐ இணைப்பை மேம்படுத்த புதிய கடல்சார் கேபிள் வழித்தடங்கள் அமைப்பதற்கான எதிர்கால திட்டத்தையும் சுந்தர் பிச்சை அறிவித்தார்.

இதுதவிர பிரதமர் மோடி ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் மற்றும் பின்லாந்து பிரதமர் பெட்டேரி ஓர்போ ஆகியோரையும் தனித்தனியாக சந்தித்தார். அப்போது இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவில் பொற்காலத்தை ஏற்படுத்தி இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். இதே போல, ஏஐ மாநாட்டில் பங்கேற்க வந்த செர்பியா அதிபர் அலெக்சாண்டர் வுசிக்கை சந்தித்த பிரதமர் மோடி பாதுகாப்பு, உற்பத்தி, உரங்கள் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

Tags : Google ,CEO ,Sundar Pichai ,PM Modi ,AI Impact Summit ,New Delhi ,Delhi ,Modi ,Bharat Mandapam ,
× RELATED 1,000 குற்றவியல் பிரிவுகள் நீக்க...