×

பைனான்ஸ் நிறுவன மேலாளரை சரமாரி தாக்கிய போலி நிருபர் பிடிஓவை மிரட்டிய வழக்கிலும் தொடர்பு பைக்கை பறிமுதல் செய்ய சென்ற

வந்தவாசி, பிப். 19: வந்தவாசி அருகே பைனான்ஸ் கட்டாததால் பைக்கை பறிமுதல் செய்ய சென்ற தனியார் நிறுவன மேலாளர் மீது தாக்குதல் நடத்திய போலி நிருபரை போலீசார் தேடி வருகின்றனர். இவர் மீது பிடிஓவை மிரட்டிய வழக்கும் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஜிந்தேந்திரபிராத்(28). இவர் வந்தவாசியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிறுவனத்தில் வந்தவாசி அடுத்த பாணம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன்(38) என்பவர் பைனான்ஸ் மூலமாக புதிய பைக் வாங்கினாராம். இதற்காக மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகையை கடந்த 6 மாதங்களாக செலுத்தாமல் இருந்ததால் பைக்கை பறிமுதல் செய்வதற்கான உத்தரவுடன் நேற்று முன்தினம் ஜிந்தேந்திரபிராத் பாணம்பட்டு கிராமத்திற்கு சென்றாராம்.

அப்போது பாண்டியனிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்ய ஜிந்தேந்திரபிராத் முயன்றபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பாண்டியன் ஜிந்தேந்திரபிராத்தை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினாராம். இதில் படுகாயம் அடைந்த ஜிந்தேந்திரபிராத் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதுகுறித்து நேற்று ஜிந்தேந்திரபிராத் தேசூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பாண்டியனை வலை வீசி தேடி வருகிறார். ஏற்கனவே கடந்த வாரம் இவர் நிருபர் எனக் கூறி தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகனை வேலை செய்ய விடாமல் தடுத்து மிரட்டியதாக தெள்ளார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில் மேலும் ஒரு வழக்கு பாண்டியன் மீது பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Vandavasi ,Thiruvannamalai district… ,
× RELATED ஜனநாயகன் படம் பார்த்துவிட்டு இரவில்...