காடையாம்பட்டி அருகே கோயில் தேரோட்ட விழா கோலாகலம் கிராம மக்கள் திரளாக பங்கேற்பு

காடையாம்பட்டி,  பிப்.5: காடையாம்பட்டி அருகே குப்பூர் மற்றும் பூசாரிப்பட்டி காளியம்மன்  கோயில் தைத்திருவிழா தேரோட்டத்தில் கிராம மக்கள் திரளாக பங்கேற்று வடம் படித்து இழுத்தனர். காடையாம்பட்டி அருகே சிக்கனம்பட்டி ஊராட்சியில், சேலம் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விமான நிலையம் அருகே பிரசித்தி  பெற்ற குப்பூர் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் தைத்திருவிழா கடந்த  மாதம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மூலவர் அம்மனுக்கு அபிஷேகம்,  அலங்காரம், தீபாராதனை நடைபெற்று வந்தது.

இதையடுத்து, பொங்கல் வைத்தல்,  மாவிளக்கு ஊர்வலம் மற்றும் பூங்கரகம், அக்னி கரகம், அலகு குத்துதல்  நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.  நிகழ்ச்சியில் ஓமலூர், காடையாம்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில்  இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்து  அம்மனை வழிபட்டனர். விழாவினையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டிருந்தது.

இதேபோல், காடையாம்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி  காளியம்மன் கோயிலில் தைத்திருவிழா நடைபெற்று வந்தது. கிடா வெட்டுதல், கரகம், வாய்ப்பூட்டு அலகு, இளநீர் அலகு குத்தி வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்  செலுத்தினர். நேற்று தேரோட்ட விழா நடைபெற்றது. இதில், கிராம மக்கள் திரளாக  பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்து அம்மனை வழிபட்டனர்.

Related Stories:

>