×

25 ஏரிகளுக்கு நீர் நிரப்ப வேண்டும்

ஓசூர், பிப்.5: ஓசூர்கொடியாளம் அணையில் இருந்து 25 ஏரிகளுக்கு நீரேற்றம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, விவசாயிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற ஓசூர் ஒன்றிய முன்னாள் கவுன்சிலரும், காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினருமான சின்னகுட்டப்பா கூறியது: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள கொடியாளம் அணையிலிருந்து 25 ஏரிகளுக்கு நீரேற்றம் செய்ய ஆய்வு மேற்கொள்ளப்படும் என முதல்வர் அறிவித்து 3 ஆண்டுகள் ஆகி விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன், ஒட்டப்பள்ளி, பாலிகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, தும்மனபள்ளி ஆகிய ஊராட்சிகளில் உள்ள ஏரிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

இந்த ஏரிகள் தற்போது வறண்டுள்ளன. இந்த ஏரிகளுக்கு தென்பெண்ணை ஆற்று நீரை நீரேற்றம் செய்தால் சுமார் 5 ஆயிரம் விவசாயிகள் பயனடைவர். கலந்துரையாடலில் 25 ஏரிகளுக்கு நீரேற்றம் செய்ய திட்ட அறிக்கை தயாரிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 3 ஆண்டுகள் கடந்த பிறகு, தற்போது தான் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, கொடியாளம் அணையில் இருந்து 25 ஏரிகளுக்கு தென்பெண்ணை ஆற்று நீரை நீரேற்றம் செய்யும் பணிகளை உடனடியாக அதிகாரிகள் தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : lakes ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 71.91 சதவீதம் நீர் இருப்பு..!!