கோவை,பிப்.18: கோவை மாவட்டத்தில் 298 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் ஊழியர்கள் ஊதியம் பணி நிரந்தரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று பணியை புறக்கணித்து போராட்டம் நடத்துவோம், டாஸ்மாக் மதுபான கடையை திறக்க மாட்டோம் என ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் தனியார் மதுபான பார்கள் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர் சங்க கோவை மாவட்ட தலைவர் ஜான் அந்தோணி கூறுகையில், ‘‘ எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த இருக்கிறோம். தமிழக அரசு உடனே எங்களது கோரிக்கையை பரிசீலனை செய்யும் என எதிர்பார்க்கிறோம். இல்லாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும், ’’ என்றார்.
