நோட்டுக்காகவும் சீட்டுக்காகவும் இடஒதுக்கீடு 16ம் தேதி என்எல்சி தலைமை அலுவலகம் முற்றுகை தவாக தலைவர் வேல்முருகன் அறிவிப்பு

நெய்வேலி, பிப். 5: வரும் 16ம் தேதி என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட போவதாக தவாக தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். இது குறித்து நெய்வேலியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய பாஜக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை தட்டிப் பறித்து வருகிறது. மத்திய பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனத்தில் மண்ணின் மைந்தர்களை புறக்கணித்து விட்டு வடஇந்தியர்களை உயர்பதவியில் நியமனம் செய்து வருகின்றனர். குறிப்பாக 259 பொறியாளர் பணியிடங்களுக்கான தேர்வு அண்மையில் நடந்து முடிந்துள்ளது.

இந்த தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 10 பேர் கூட இல்லை. இந்த தேர்வுக்கு தமிழகத்தில் லட்சக்கணக்கான பேர் படித்த இளைஞர்கள் இருக்கும்போது தமிழர்கள் தேர்வு பெறாமல் போனது எப்படி? சமீபத்தில் நடந்த பொறியாளர்கள் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வருகின்ற 16ம் தேதி என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தப்படும். திமுக தலைவர் ஸ்டாலினிடம் நானும் பல்வேறு வன்னிய சமூகத்தினரும் தமிழகத்தில் வன்னியர்களுக்கு 15 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

அதற்கு திமுக ஆட்சிக்கு வந்தால் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என திமுக தலைவர் உறுதி அளித்துள்ளார். தற்போது சட்டமன்ற தேர்தலை வைத்து மருத்துவர் ராமதாஸ் வன்னியர் இட ஒதுக்கீட்டை நோட்டுக்கும், சீட்டுக்கான ஆயுதமாக கையில் எடுத்துள்ளதாக தெரியவருகிறது. இவ்வாறு கூறினார்.

Related Stories:

More