×

வேலூர் மாநகராட்சியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலியில் முதல்வர் திறந்தார் டிஆர்ஓ குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்

வேலூர், பிப்.5: வேலூர் மாநகராட்சியில் இரு இடங்களில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று திறந்து வைத்தார்.தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வேலூர் கோட்டம் சார்பில் வேலூர் மாநகராட்சியில் ஆட்சேபகரமான குடிசைப் பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்காக தொலை நோக்கு திட்டம்-2023 செயல்படுத்தப்பட்டுள்ளது. அதில் குடிசைப்பகுதிகளற்ற நகரங்கள் திட்டத்தின் கீழ் வேலூர் மாநகராட்சியில் உள்ள டோபிகானா திட்டப்பகுதி-2ல் 64 அடுக்குமாடி குடியிருப்புகள் தரை மற்றும் 3 அடுக்கு தளம் மேம்பாட்டில் ₹5.72 கோடி செலவில் கட்டப்பட்டது. ஒவ்வொரு குடியிருப்பும் 390 சதுர அடி கட்டப்பட்டுள்ளது.அதேபோல் மாநகராட்சியில் உள்ள விருபாட்சிபுரம் கன்னிகாபுரம் திட்டப்பகுதியில் 224 குடியிருப்புகள் தரை மற்றும் 3 அடுக்கு தளம் மேம்பாட்டில் ₹20.89 கோடி செலவில் ஒவ்வொரு குடியிப்பும் 400 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகளில் ஒரு பல்நோக்கு அறை, படுக்கையறை, சமையலறை, குளியலறை மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளது. அனைத்து குடியிருப்புகளுக்கும் மேல்நிலைத் தொட்டியிலிருந்து தண்ணீர் மற்றும் மின்வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கான்கிரீட், நடைபாதை, தெருமின்விளக்குகள், கீழ்நிலை நீர் தொட்டிகள் போன்ற வசதிகளுடன் குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அடுக்குமாடிகள் திறப்பு விழா நேற்று காலை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். அதைதொடர்ந்து கன்னிகாபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் டிஆர்ஓ பார்த்தீபன் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் குடிசைமாற்று வாரிய நிர்வாக பொறியாளர் அசோகன், உதவி நிர்வாக பொறியாளர் பாலமுரளிதரன், உதவி பொறியாளர்கள் பீரவினா, கவிதா உட்பட பலர் கலந்து கொணடனர். நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெளியே வந்த டிஆர்ஓ பார்த்தீபனிடம், அந்த பகுதி பொதுமக்கள் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் எங்களுக்குதான் வழங்க வேண்டும். நாங்கள் இங்கு பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு டிஆர்ஓ, முதல்கட்டமாக இன்று 10 நபர்களுக்கு மட்டுமே தேர்வு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு விரைவில் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்து தரப்படும் என்றார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags : Chief Minister ,Vellore Corporation ,DRO ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...