கரிசல் மண்ணில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி விளைவிக்கும் விவசாயி

காரியாபட்டி, பிப். 5: காரியாபட்டி அருகே மாந்தோப்பு கிராமத்தில் கரிசல்காட்டு பூமியில் கேரட், பீட்ருட், முள்ளங்கி, காலிபிளவர், முட்டைகோஸ் ஆகியவற்றை விவசாயி விளைவித்து ஆச்சரியப்படுத்தி வருகிறார். வானம் பார்த்த பூமியான விருதுநகர் மாவட்டத்தில் மானாவாரி சாகுபடிகளே அதிகம். ஏனென்றால் இது மழை மறைவு மாவட்டமாகும். சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை கூட இம்மாவட்டத்தை ஏமாற்றித்தான் சென்றது. ஆனால், அரசு விவசாயிகளை கண்டு கொள்ளாமல் போனாலும், உழைப்பை பயன்படுத்திக்கொண்டு சில விவசாயிகள் சாதனையும் படைத்து வருகின்றனர்.அந்த வகையில் காரியாபட்டி அருகே உள்ள மாந்தோப்பு கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயி ராமச்சந்திரன், தன்னுடைய 8 ஏக்கர் நிலப்பரப்பில் 2 ஏக்கரில் குளிர்ந்த மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையும் காரட்,பீட்ருட்,முள்ளங்கி ஆகியவற்றை விளைவித்து ஏற்கனவே சாதனை படைத்திருக்கிறார். இந்நிலையில் 90 நாட்களில் சாகுபடியாகும் காலிபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றை விளைவித்து தற்போது ஆச்சரியப்படுத்தியுள்ளார். இதுகுறித்து விவசாயி ராமச்சந்திரன் கூறுகையில், ``ஒரே பயிரை திரும்ப, திரும்ப சாகுபடி செய்யாமல், நிலத்தை இயற்கை முறையில் நன்கு பக்குவப்படுத்தி லாபம் தரும் காய்கறிகளை விவசாயிகள் பயிரிடலாம். எந்த நிலத்திலும் எந்த பயிரையும் விளைவிக்க முடியும் என்றும் விவசாயம் என்றாலே நஷ்டம் என்பது இல்லை. லாபம் தரும் வகையில் விவசாயத்தை செய்யலாம். இளைஞர்கள் விவசாயம் செய்ய முன்வரவேண்டும்’’ என்றார்.

Related Stories:

>