நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு வழங்காததால் தாலுகா அலுவலக பொருட்கள் ஜப்தி திருவில்லிபுத்தூரில் பரபரப்பு

திருவில்லிபுத்தூர், பிப். 5: நிலம் கையகப்படுத்திய வழக்கில் கூடுதல் இழப்பீடு வழங்காததால் திருவில்லிபுத்தூர் தாலுகா அலுவலக பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டது. சிவகாசியை சேர்ந்தவர் அன்ஸ்ராஜ் சந்திரன். இவருக்கு சொந்தமான நிலத்தை 1995ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கையகப்பபடுத்தப்பட்டது. இந்த இடத்திற்கு கூடுதல் நஷ்டஈடு கிடைக்காததால் சந்திரன் திருவில்லிபுத்தூர் சப்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் இழப்பீட்டு தொகையாக ரூ.10 லட்சத்து 53 ஆயிரத்து 432 வழங்க சப்கோர்ட் உத்தரவிட்டது. இதில் ரூ.5 லட்சம் மட்டும் வழங்கி விட்டு, மீதி தொகையை வழங்கவில்லை. இந்நிலையில் சந்திரன் சப்கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து சப்கோர்ட் திருவில்லிபுத்தூர் தாலுகா அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்படி நீதிமன்ற ஊழியர்கள் நேற்று தாலுகா அலுவலகம் வந்து தாசில்தார், ஊழியர்கள் பயன்படுத்தும் நாற்காலிகள், மேஜைகள் என அனைத்தையும் ஜப்தி செய்து லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர். கூடுதல் இழப்பீடு தொகை வழங்காததால் தாலுகா அலுவலக பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டது திருவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>