×

மழையால் சேதமடைந்த பயிர்களை முழுமையாக பார்க்காமல் காரில் பறந்த மத்திய குழுவினர் விவசாயிகள் புகார்

விருதுநகர், பிப். 5: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த வடகிழக்கு பருவமழையை நம்பி 1லட்சத்து 11ஆயிரத்து 303 ஹெக்டேரில் நெல், சோளம், கம்பு, மல்லி, உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம், நவதானியம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு இருந்தன. இதில் படைப்புழு தாக்குதல் காரணமாக 40 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த மக்காச்சோளம் கடும் சேதம் கண்டது. தொடர்ந்து ஜனவரி மாதம் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 11,578 ஹெக்டேரில் நெல், கம்பு, சோளம், பருத்தி, மல்லி, நவதானியம், உளுந்து, பாசிப்பயறு பயிர்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக திருச்சுழி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம் பகுதிகளில் மழையால் கடும் சேதம் ஏற்பட்டது.இந்நிலையில் நேற்று மழையினால் ஏற்பட்ட பயிர் சேதத்தை பேரிடர் மேலாண்மை ஆணையர் டாக்டர் ஜெகநாதன் தலைமையில் கலெக்டர் கண்ணன், டில்லி உள்துறை அமைச்சக இணை செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி, மத்திய வேளாண்- விரிவாக்கத்துறையின் கீழ் இயங்கும் எண்ணை வித்து வளர்ச்சித்துறை இயக்குநர் டாக்டர் மனோகரன், மத்திய செலவினத்துறை நிதி அமைச்சக துணை இயக்குநர் மகேஷ்குமார் ஆகியோர் கொண்ட மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.

முதலில் அருப்புக்கோட்டை அருகே செங்குளம், கீழ்குடி, மறவர் பெருங்குடி பகுதிகளில் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்தனர். அப்போது கீழ்குடியில் மத்திய குழுவினரிடம் விவசாயிகள் மழையால் நீரில் மூழ்கிய, செடிகளிலேயே முளைத்த பயிர்களை வேதனையுடன் காட்டினர்.       எம்.ரெட்டியபட்டி வட்டாரத்தில் 5,258.52 ஹெக்டேரில் 3,679.69 ஹெக்டேர் பயிர்கள் மழையால் சேதமடைந்து விட்டதாக பட விளக்கங்களுடன் அதிகாரிகள் விளக்கினர்.  
தொடர்ந்து குழுவினரிடம் விவசாயி குமாரசாமி 25 ஏக்கரில் பயிரிட்ட நெல் முழுவதும் மழையில் மூழ்கி முளைத்துவிட்டதாக தெரிவித்தார். விவசாயி போஸ் 8 ஏக்கரில் பயிரிட்ட நெல், உளுந்து, சோளம், பருத்தி முழுவதும் சேதமாகி விட்டதாக தெரிவித்தார். வடக்கு நத்தம் விவசாயி ரவிக்குமார் 15 ஏக்கரில் பயிரிட்ட வெங்காயம், மக்காச்சோளம், மல்லி முழுவதும் அழுகிவிட்டதாக தெரிவித்தார். விவசாயி சத்யா 4 ஏக்கரில் உளுந்து, நெல், சோளம் சேதமாகியதாக தெரிவித்தார்.

கீழ்குடியில் முருகன், முனியசாமி, செங்குளத்தில் அய்யாரப்பன் ஆகியோரது நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையில் மூழ்கி முளைத்ததை பார்வையிட்டனர்.  மறவர்பெருங்குடியில் 1.63 ஹெக்டேரில் பயிரிட்ட சூரியகாந்தி பயிர் மழையில் நனைந்து முளைத்து நாசமானதை பார்வையிட்டனர். பின்னர் அங்கு சாலையோரத்தில் மத்திய குழுவை சந்திக்க காத்திருந்த விவசாயிகளை கண்டுகொள்ளாமல் காரில் பறந்து தூத்துக்குடி சென்றனர்.
விவசாயி நாகராணி (பூலாங்கல்): நகை கடன் வாங்கி 3 ஏக்கரில் நெல் பயிரிட்டேன். அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மழையால் முழுமையாக மூழ்கி அழுகி முளைத்து விட்டது. ஏக்கருக்கு 30 மூடை கிடைக்க வேண்டிய நிலையில், முளைத்த நெல்லாக 12 மூடை கூட கிடைக்கவில்லை. குவிண்டால் ரூ.1,200க்கு விலை போக வேண்டிய நெல் தற்போது ரூ.400 கூட விலை போகவில்லை. அதிகாரிகள் பாதிப்பை கண்துடைப்பாக பார்வையிடாமல் முழுமையாக பார்க்க வேண்டும்.விவசாயி கருப்பையா (வாகைகுளம்): 6 ஏக்கரில் பயிரிட்ட நெல் முழுவதும் சாய்ந்து முளைத்து விட்டது. அதிகாரிகள் முழு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : team ,
× RELATED இன்சுலின் வழங்க கோரிய மனு தள்ளுபடி...